தோட்டப்பகுதி அபிவிருத்திக்குத் தொழிலாளர் அல்லாதோரும் தொடர்பு கொள்ள முடியும்; சோ.ஸ்ரீதரன்!

0
168

தோட்டங்களில்; தொழில் செய்கின்ற தொழிலாளர்கள் மாத்திரமின்றி அந்தத் தோட்டங்களில்; தொழில் செய்யாதவர்களும் எம்முடன் தொடர்பு கொள்கின்ற பட்சத்தில்; அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

டிக்கோயா என்பீல்ட் பார்கண்டேல் தோட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டமென்றில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது

தற்போது தோட்டங்களில் தொழில் செய்யாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. தோட்டங்களில் தொழிலாளர்கள் குறைந்த அளவிலேயேயுள்ளனர். எனினும் தொழிற்சங்கங்களில் அங்கத்துவமுள்ள தொழிலாளர்களே தொழிற்சங்கங்களிடமும் அந்தச்சங்கங்களுடன் தொடர்புள்ள அரசியல் கட்சிகளுடனும் தொடர்பிலுள்ளனர்.

ஆனால் தேர்தல் காலங்களில் வாக்களிக்கின்ற அனைத்துத் தரப்பினருடனும் எம்மால் நேரடியாக தொடர்பு கொள்ள முடியாத நிலைமையுள்ளதால் தோட்டத்தில் தொழில் செய்யாத ஏனையவர்களின் விருப்பங்களையும் தேவைகளையும் அறிந்து கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமையை இல்லாமல் செய்வதற்கு அமைச்சர் திகாம்பரத்தின் ஆலோசனைக்கேற்ப தொழிலாளர் தேசிய சங்கத்தின் முக்கியஸ்தர்களான நாம் தோட்டங்களுக்கு விஜயம் செய்து தொழிலாளர்களிடத்திலும் ஏனையவர்களிடத்திலும் தொடர்புகளை ஏற்படுத்தி வருகின்றோம்.அப்போது தான் ஒவ்வொரு தோட்டத்திலுமுள்ள பிரச்சினைகளை அறிந்து அவற்றினை முடிந்தளவு தீர்த்து வைக்க முடியும். டிக்கோயா பிரதேசத்திலுள்ள பார்க்கண்டேல் தோட்டத்திலுள்ள இளைஞர்கள் என்னை இங்கு அழைத்துவந்து தோட்டத்திலுள்ள குறைபாடுகளை அறிய செய்துள்ளனர்.

அந்த இளைஞர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்தத் தோட்டத்திலுள்ள லயன்குடியிருப்புக்களின் கூரை தகரங்களை மாற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவுள்ளேன். அத்துடன் தற்காலிக குடில்களில் பொலித்தின் உறைகளை கூரையாக பயன்படுத்தும் ஐந்து குடும்பங்களுக்கு எனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து தகரங்களைப் பெற்றுத்தருவதற்கும் நடவடிக்கை எடுக்கவுள்ளேன்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here