தோட்ட தொழிலாளர்களின் 1700 ரூபா சம்பளம் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய தகவல்

0
111

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பில் அரசாங்கம் முக்கிய கவனம் செலுத்தியுள்ளதாகவும், எதிர்வரும் 15இல், இது தொடர்பான முடிவை அரசாங்கம் அறிவிக்கும் என்றும் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று எரான் விக்ரமரத்ன எம்.பி எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இறுதி நிலைப்பாட்டை அறிவிப்பதற்காக எதிர்வரும் 15 வரை முதலாளிமார் சம்மேளனத்துக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அன்றைய தினத்தில் (15) உறுதியான தீர்மானமொன்றை அரசாங்கம் மேற்கொள்ளும்.

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் முதலாளிமார் சம்மேளனம் மற்றும் சம்பந்தப்பட்டதொழிற்சங்கங்களுக்கிடையிலான பேச்சுக்களில் இணக்கப்பாடுகள் எதுவும் இதுவரை எட்டப்படவில்லை.

கம்பெனி உரிமையாளர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு அழைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.இதன்போது,
தொழிற்சங்கங்களால் முன்வைக்கப்பட்டுள்ள 2,000 ரூபா 2,300 ரூபா சம்பள அதிகரிப்பு தொடர்பில் தெரிவிக்கப்பட்டது. அவர்களது கருத்துக்களையும் கேட்டறிந்த ஜனாதிபதி வேண்டுகோள் ஒன்றையும் முன் வைத்தார். இந்த யோசனையில் அவர் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபா சம்பளத்தை வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.

அந்த வேண்டுகோளை அடிப்படையாக வைத்து மீண்டும் மூன்று சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இது தொடர்பில் கம்பெனி உரிமையாளர்கள் தமது நிலைப்பாட்டை தெரிவிக்கையில் 1,200 ரூபா சம்பளத்தை வழங்க முடியும். கிடைக்கும் வருமானத்தை வைத்தே இதையும் தீர்மானிக்க முடியும் என்றும் தெரிவித்தனர். எனினும், இதற்கு தொழிற்சங்கங்கள் இணங்கவில்லை. இதையடுத்து மீண்டும் ஜனாதிபதியுடனும் ஏனைய சம்மந்தப்பட்டவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

வரலாற்று காலம் முதல் கூட்டு ஒப்பந்த அடிப்படையிலேயே, சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு வந்துள்ளது. சம்பள அதிகரிப்பு மட்டுமின்றி தொழிலாளர்களுக்கான சலுகைகள் தொடர்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தீர்வுகள் காணப்பட்டுள்ளன.

இந்லையிலேயே 2020 கூட்டு ஒப்பந்தத்திலிருந்து இரு தரப்பினரும் விலகின. இதனால் கூட்டு ஒப்பந்தம் தற்போது நடைமுறையில் இல்லை.

சம்பள நிர்ணய சபைக்கு எதிராக 2021 இல்,சட்ட நடவடிக்கைக்காக நீதிமன்றம் சென்றதன் பின்னர் வழக்கில் தொழில் அமைச்சு வெற்றி பெற்றாலும் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வகையில் கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் இதனை தீர்க்க முடியாத நிலையிலேயே, மீண்டும் சம்பள நிர்ணய சபையுடன் சம்பந்தப்படுத்தி இதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சம்பள நிர்ணய சபை இரண்டு முறை கூடிய போதும் அதற்கு முதலாளிமார் சம்மேளனம் அவற்றுக்கு சமுகமளிக்கவில்லை. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் தீர்மானம் ஒன்றை மேற்கொள்வதற்கான அதிகாரத்தை, தொழில் ஆணையாளருக்கு தொழில் அமைச்சரினால் வழங்க முடியும்.

அந்த வகையிலேயே அடிப்படை சம்பளம் 1,350 ரூபாவாகவும் ஏனைய கொடுப்பனவுகளாக 350 ரூபாவையும் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டு வர்த்தமானியும் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் அரசாங்கம் 1,700 ரூபா என்ற தீர்மானத்தை அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here