இதுவரை காலமும் இருந்த அரசாங்கங்கள் தோட்ட தொழிலாளர்களுக்கு ஒரு மாற்றுத் தாயாகவே செயல்பட்டு வந்த நிலையில், தற்போதைய அரசாங்கம் இடதுசாரி அரசாங்கமாக இருப்பதால், தோட்ட தொழிலாளர்கள் தொடர்பாக அதிகமான கரிசனை காட்டும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது. இந்நிலையில், வரவு செலவு திட்டத்தில் தோட்ட தொழிலாளர்களுக்கு ரூ.1700 சம்பள உயர்வு வழங்கப்பட்ட தீர்மானம் மிகவும் வரவேற்கத்தக்கது என இலங்கை செங்கொடி சங்கத்தின் தலைவர் செல்லையா சிவசுந்தரம் தெரிவித்தார்.
இன்று (20ஆம் திகதி) ஹட்டன் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், “அரசாங்கம் இன்று உயர்த்தியுள்ள இந்த சம்பளம் அனைத்து தோட்ட தொழிலாளர்களுக்கும் சென்றடையும் வகையில் சட்டத்திட்டங்களை கொண்டு வர வேண்டும். ஏனெனில், இன்று கம்பனிகள் தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டுவதற்காக பல்வேறு உத்திகளை பயன்படுத்தி வருகின்றன. நிரந்தர தொழிலாளர்களை கைக்காசு வேலை செய்யும் தொழிலாளர்களாக மாற்றி வருகின்றன. பல வருடங்கள் தோட்டத்தில் வேலை செய்த தொழிலாளர்கள் ஒருமாதம் வேலைக்கு வராவிட்டால் அவர்களின் பெயர்களை நீக்கி, அவர்களை கைக்காசு தொழிலாளர்களாக வேலை செய்ய விடுகின்றனர். புதிய தொழிலாளர்களை பெயர் பதிவு செய்யாமல், ஐந்து அல்லது ஆறு வருடங்களாக கைக்காசு தொழிலாளர்களாக வைத்திருக்கின்றனர்.”
“அதேபோல், தேயிலை நாட்டுதல் அல்லது தோட்டங்களை துப்பரவு செய்வது போன்ற பணிகள் ஒப்பந்தம் இல்லாமல் வழங்கப்படுகின்றன. தோட்டப்புறங்களில் தொழிலாளர்களால் வளர்க்கப்பட்ட மரங்கள் தனிப்பட்ட முறையில் விற்பனை செய்யப்படுகின்றன. பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. மஸ்கெலியா பிரதேசத்தில் மட்டும் கம்பனி நிர்வாகத்தின் கீழ் சுமார் ஆறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. தொழிற்சாலைகளிலிருந்து உபகரணங்கள் கூட கழற்றி விற்கப்படுகின்றன.”
“இதுவரை காலம் இருந்த அரசாங்கங்கள் தேயிலை மற்றும் இறப்பர் தொழிலாளர்களை மாற்றுத் தாய் போல் நடத்தி வந்துள்ளன. ஆனால், தற்போதைய இடதுசாரி கொள்கையை கொண்ட அரசாங்கம் தொழிலாளர்களின் உரிமைகளை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும். 200 வருடங்களுக்கு மேலாக நாட்டிற்காக உழைத்த மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி, காணிகள் இன்றி வாழ்கின்றனர். எனவே, அவர்களின் பிரச்சினைகளை தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ரூ.1700 சம்பள உயர்வு எவ்வித சுரண்டலுமின்றி அனைத்து தொழிலாளர்களுக்கும் கிடைக்க வேண்டும்,” என அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த ஊடக சந்திப்பில் பொருளாளர் விஸ்வாசம் ராஜலக்ஷ்மி கருத்து தெரிவிக்கையில், “தோட்ட கம்பனிகள் இன்று தோட்ட தொழிலாளர்களை நிரந்தரமற்ற தொழிலாளர்களாக மாற்றுவதிலேயே அக்கறை செலுத்தி வருகின்றன. தோட்டங்களில் 180 நாட்கள் வேலை செய்தால் தொழிலாளர்கள் நிரந்தரமாக மாற்றப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. ஆனால், பல ஆண்டுகள் வேலை செய்தாலும் அவர்கள் நிரந்தரமாக மாற்றப்படுவதில்லை. இதன் காரணமாக, தொழிலாளர்களுக்கு ஈ.பி.எப், ஈ.டி.எப், பிரசவ உதவி நிதி, பிரசவ விடுப்பு உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்றன.”
“கூட்டு ஒப்பந்தம் இல்லாததால், கம்பனிகள் தன்னிச்சையாக செயல்பட்டு தொழிலாளர்களை அடக்கி ஆளுகின்றன. எனவே, தொழிலாளர்களின் பாதுகாப்புக்காக புதிய அரசாங்கம் சட்டங்களை கொண்டு வர வேண்டும். வாழ்க்கை செலவுக்கேற்ப ஊதியத்தை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என அவர் கேட்டுக்கொண்டார்.
மலைவாஞ்ஞன்