மலையக பெருந்தோட்ட பகுதிகளில் தோட்ட நிர்வாகத்துடன் கைகோர்த்து கொண்டு தங்களது அரசியலை முன்னெடுக்கும் மோசமான தொழிற்சங்க கலாசாரமொன்று தலைவரித்தாடுகின்றது. அகரபத்தனை பிரதேச தோட்டங்களில் இப்போதைய நிலைமைகள் அதிகளவு அடையாளம் காணப்படுகின்றது என தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதிப் பொதுச்செயலாளர் திலகர் எம்.பி தெரிவித்துள்ளார்.டொரிங்டன் தோட்ட தொழிலாளி வேலையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டதாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது அங்கு வருகைதந்த ஒரு கட்சியின் தலைவர் பக்கசார்பாக நடந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் தோட்ட நிர்வாகத்தினரை காப்பாற்றும் வகையிலான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளார்.
பெருந்தோட்ட பகுதிகளில் மக்கள் வாழும் பிரதேசங்களில் கூட்டி சுத்தம் செய்வதற்கும் ஆடைகளை சலவை செய்வதற்கும் முடி திருத்துவதற்கும் என தொழிலாளிகள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு தோட்ட நிர்வாகத்தினூடாக சம்பளம் வழங்கும் நடைமுறை பல ஆண்டுகாலமாக இருந்து வந்தது. எனினும் கடந்த இருபது ஆண்டுகளாக இந்த நிலைமைகள் மாற்றம் பெற்று மக்கள் தாமே சுயாதீனமாக செய்து கொள்ளும் நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன எனினும் அகரபத்தனை பிரதேசங்கள் பலவற்றில் தோட்ட லயன்புடியிருப்புச் சூழலை சுத்தம் செய்வதற்காக ஒரு சுத்திகரிப்பு தொழிலாளியை அமர்த்தியிருப்பதாக பொய்யாக சிருஷ்டிக்கப்பட்டு அதற்குரிய சம்பளத்தை குறிப்பிட்ட தொழிற்சங்கத்தின் தோட்ட கமிட்டி தலைவருக்கு வழங்கப்பட்டு வந்துள்ளது. பல ஆண்டுகளாக இடம்பெற்றுள்ள இந்த நடவடிக்கை லட்சகணக்கான தொகை இவ்வாறு குறித்த தொழிற்சங்க தலைவருக்கு சென்றுசேர்ந்துள்ளது.
இதனை பெற்றுக்கொள்ளுவதற்கு தொழிற்சங்கம் தோட்ட நிர்வாகத்திற்கு ஆதரவாக ஒட்டுமொத்த தொழிலாளர்களையூம் காட்டிகொடுக்கும் கைங்கரியரியத்திற்கு ஈடுபட்டு வந்துள்ளனர்.
இத்தகைய பின்னணியிலேயே தோட்டங்களில் தொழிற்சங்க பிரச்சினைகள் உருவாகின்றபோது தாம் அதனை தீர்த்து வைக்கின்றவர்கள்போன்று உடனடியாக களத்திற்கு வந்து சில தொழிற்சங்க தலைவர்கள் நாடகமாடுகின்றனர். திட்டமிட்ட நாடகம் என தெரிந்துகொண்டு களத்தில் மக்கள் கேள்வியெழுப்பினால் அவர்களை தாக்குவதும் தூசிப்பதும் என தொழிலாளர்களை அச்சுறுத்தி வருகின்றனர். அண்மைய மன்ராசி டொரிங்டன் தோட்டங்களில் தொழிலாளர்களுக்கு எதிராக இத்தகைய சம்பவங்கள் இடம்பெற்றுவருகின்றது. இந்த செயலை வன்மையாக கண்டிப்பதோடு தொழிலாளர் உரிமைக்காக போராடும் எல்லா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுக்காகவூம் தொழிலாளர் தேசிய சங்கம் பக்க பலமாக இருந்து செயற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.