தோட்ட நிர்வாகம் பெயர் பதியும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்! : செபஸ்டியன் பிலிப்குமார்

0
118

தோட்டப்பகுதிகளில் புதிதாக திருமணம் முடித்து வேறு தோட்டங்களுக்கு இடம்மாறி செல்லும் பெண் தொழிலாளர்களுக்கு தேயிலை தொழிலை விரும்பும் பட்சத்தில் உடனடியாக அத்தோட்ட நிர்வாகம் பெயர் பதியும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

இதை விடுத்து பெயர் பதிவதில் இழுத்தடிப்பு நடவடிக்கையை கையாளும் தோட்ட நிர்வாகங்களுக்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் தயாராக வேண்டும் என தொழிலாளர் தேசிய சங்க பொதுச்செயலாளர் செபஸ்டியன் பிலிப்குமார் தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர் மேலும் தெரிவித்ததாவது.

பெருந்தோட்ட பகுதிகளில் தேயிலை தொழிலை மேற்கொண்டு வரும் திருமணமாகாத பெண்கள் திருமணம் முடித்து அதே தோட்டத்தில் வாழாமல் வேறு தோட்டங்களுக்கு இடம்மாறி செல்லும்போது  குறித்த தோட்டத்தில் தொழில் செய்தமைக்கான ஆவணங்களை பெற்று செல்கின்றனர்.

இந்த நிலையில் இப் பெண் தொழிலாளர்கள் தமது கணவர் வீட்டுக்கு சென்று மீண்டும் தொழிலாளியாக பணியாற்ற விரும்புமாயின் இரண்டு வாரத்திற்குள் இவரை உடடினடியாக பெயர் பதிவது தோட்ட தொழில் உரிமை சட்டத்தில் ஒன்றாகும்.

ஆனால் சில தோட்ட நிர்வாகங்கள் இன்றைய காலப்பகுதியில் சட்டங்களை மீறி வருகின்றனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

மாறாக 3 மாத காலப்பகுதிக்கு இவர்களை இழுத்தடிப்பதுடன் பின்னர் இப்பெண்னுக்கு ஏற்படும் கர்ப்ப காலத்தை காரணம் காட்டி பெயர் பதிவதை நிறுத்தி வருகின்றனர் என கண்டறியப்பட்டுள்ளது.

அண்மையில் கொட்டகலை பகுதி தோட்டமொன்றிலிருந்து பலாங்கொடை தோட்டமொன்றுக்கு திருமணம் முடித்து சென்ற பெண் தொழிலாளர் ஒருவருக்கு இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளமையை அவர் இதன்போது சுட்டிகாட்டினார்.

தோட்ட நிர்வாகங்களின் செயல் காரணமாக இவர்கள் வருமான சிக்கலை எதிர்கொள்வதுடன் குடும்ப பிணக்குகளுக்கும் ஆளாக கூடியவர்களாக அமைகின்றனர்.

தோட்ட நிர்வாகங்கள் சில புதிதாக திருமணமாகி தோட்ட தொழிலுக்கு இணைத்துக்கொள்ளும் பெண் தொழிலாளர்களுக்கு பெயர் பதிந்தால் அவர்களுக்கான பிரசவ சகாய நிதி மற்றும் விடுமுறைகள் மருத்துவ நடவடிக்கைகள் போன்ற வற்றிற்கு நிர்வாகம் முகம் கொடுக்க நேரிடுவதை தடுத்து கொள்ளவே இந்த இழுத்தடிப்பு காரணமாக அமைந்துள்ளமை தெரியவந்துள்ளது.

ஆனால் இவ்விடயமானது பெருந்தோட்ட தொழில் உரிமையில் பெண் தொழிலாளர்களுக்கு செய்யப்படும் துரோகமாகும்.

இந்நிலையை தொடரவிடும் பட்சத்தில் எதிர்காலத்தில் குழந்தைபேறு பெறும் தாய்மார்களுக்கு நிர்வாகத்தால் வழங்கப்படும் சலுகைகள் மறுக்கப்படும் என்பதனால் இவ்வாறான விடயத்தில் ஈடுபடும் தோட்ட நிர்வாகங்களுக்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கை எடுக்க அனைத்து தொழிற்சங்கங்களும் தயாராக வேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தார்.

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here