த பினான்ஸ் நிறுவன வைப்பாளர்கள் 6300 பேருக்கு இன்னும் நீதி நிலைநாட்டப்படவில்லை!

0
42

த பினான்ஸ் நிதி நிறுவனத்தில் பாரிய முறைகேடுகளும் குறைபாடுகளும் இடம்பெற்றுள்ளன. நிறுவனத்தின் சொத்துக்களை வெளிப்படையான முறையில் ஏலம் விட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிதியை மீளளிப்பது அரசாங்கத்தினதும் இலங்கை மத்திய வங்கியினதும் தலையாய கடமையாகும்.

த பினான்ஸ் நிதி நிறுவனத்தில் வைப்பிலிட்டு அதனால் பாதிக்கப்பட்ட 6300 பேர்களினது பிரச்சினைகள் குறித்து ஆராயும் கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

த பினான்ஸ் தனியார் நிதி நிறுவனத்தின் 6300 வைப்பாளர்களும் தங்களுக்கு எப்போது நியாயமும் நீதியும் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். நிறுவனத்தின் மொத்த சொத்துக்களின் பெறுமதி என்ன, பொறுப்புகளின் அளவு என்ன, கலைத்தல் பொறிமுறையின் கீழ் வைப்பாளர்களுக்குச் செலுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள தொகையும் அதற்கான காலக்கெடுவும் என்ன என்பவை குறித்து எந்தவொரு தெளிவான விளக்கமும் இதுவரை வழங்கப்படவில்லை.
த பினான்ஸ் நிறுவனத்தில் இடம்பெற்ற நிதி முறைகேடுகள் தொடர்பான தடயவியல் தணிக்கையின் தற்போதைய நிலை குறித்து அரசாங்கமும் மத்திய வங்கியும் வைப்பாளர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் செய்யப்பட்ட முறைப்பாடுகளுக்கு என்ன நேர்ந்தது என்பது கூட அறிய முடியாத சூழல் நிலவுகிறது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இனியாவது அரசாங்கம் இதில் நேரடியாகத் தலையிட்டு, உரிய நிறுவனங்களிடமிருந்து உரிய அறிக்கைகளைப் பெற வேண்டும். வெளிப்படைத்தன்மையுடன் கூடிய வேலைத்திட்டத்தின் மூலம் சொத்துக்களை ஏலம் விட்டு வைப்பாளர்களின் நிதியைப் பெற்றுத்தர வேண்டும். கடந்த காலங்களில் இடம்பெற்ற நிதிப் பிறழ்வுகளின் அடிப்படையில் அவதானிக்கும் போது, 1.7 பில்லியன் ரூபா இலாபத்தில் இயங்கிவந்த இந்த நிறுவனம், 2008 முதல் 2018 வரையிலான காலப்பகுதியில் 19 பில்லியன் ரூபா நஷ்டத்தைச் சந்தித்தது எவ்வாறு? நிறுவனம் மிக மோசமான நிதி நெருக்கடியில் இருந்தபோதும், புதிய வைப்பாளர்களை மேலும் பணத்தை வைப்புச் செய்ய தூண்டிய விளம்பர மற்றும் ஊக்குவிப்பு திட்டங்களை முன்னெடுத்தது யார்? இந்த நிதிப் பேரழிவிற்குப் பொறுப்புக் கூறப் போவது யார்? என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு கேள்வி எழுப்பினார்.

இதுவரை வைப்பாளர்களுக்கு அவர்களின் மொத்த வைப்புத் தொகையில் 7.5 சதவீதம் மற்றும் 5.5 சதவீதம் என்ற அடிப்படையில் மட்டுமே பகுதி கொடுப்பனவுகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால், பாதிக்கப்பட்ட 6,300 குடும்பங்களுக்கு இன்னமும் முழுமையான நீதி கிடைக்கவில்லை.
த பினான்ஸ் நிதி நிறுவனத்தின் வளங்களும் சொத்துக்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. அந்த வளங்கள் அனைத்தும் அதன் உண்மையான உரிமையாளர்களான வைப்பாளர்களுக்கே சேர வேண்டும். நிறுவனத்தின் சொத்துக்களைச் சரியாக மதிப்பீடு செய்து ஏலத்தில் விற்பனை செய்வதன் மூலம் வைப்பாளர்களுக்கு நியாயமான நீதியை உடனடியாக வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here