அதர்மம் அழிந்து, தர்மம் நிலைநிறுத்தப்பட்டதை நினைவூட்டுகிறது தீபாவளி பண்டிகை. அதேபோல மலையகத்தில் அதர்ம அரசியலுக்கு முடிவுகட்டி, தர்மத்தின் வழியில் அரசியல் நடக்க வேண்டுமெனில் என்னை போன்றவர்களை சபைக்கு அனுப்புமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றேன் என்று ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் நுவரெலியா மாவட்ட தலைமை வேட்பாளர் அனுஷா சந்திரசேகரன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தமது செய்தியில்,
31 ஆம் திகதி தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும் அதேவேளை, மலையக அரசியல் வரலாற்றில் தமிழ்ப் பெண் பிரதிநிதித்துவத்தை வென்றெடுக்கும் வகையில் நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனநாயகத் திருவிழாவை கொண்டாடுவோம் எனவும் அனுஷா தெரிவித்துள்ளார்.
“ நரகாசூரன் அழிக்கப்பட்ட நாளே தீபாவளி பண்டிகையாகக் கொண்டாடப்படுகின்றது என எமது ஊர்களில் கதை சொல்வார்கள். என்னை பொறுத்தவரை மலையகத்தில் இன்னும் நரகாசூரர்கள் வாழ்ந்துகொண்டேதான் இருக்கின்றனர். அந்த நரகாசூரர்களை ஒதுக்கினால்தான் நமக்கு விடிவு பிறக்கும். தீபாவளி பண்டிகையின்போது இவ்விடயத்தை நினைவில் கொள்வோம்.
ஆயுதம் ஏந்தியெல்லாம் மலையகத்திலுள்ள நரகாசூரர்களை அழிக்க வேண்டியதில்லை, வாக்குரிமை என்ற ஜனநாயக ஆயுதம்மூலம் அவர்களை வீட்டுக்கு அனுப்பலாம்.அனைத்து சொந்தங்களுக்கு தீபாவளி வாழ்த்துகூறும் அதேவேளை, நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனநாயகத் திருவிழாவுக்கும் அதேபோல நாளை ஒதுக்கிக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.” – எனவும் தான் விடுத்துள்ள தீபாவளி வாழ்த்து செய்தியில் அனுஷா சந்திரசேகரன் குறிப்பிட்டுள்ளார்.
மிகவும் அமைதியாகவும், சுகாதார பாதுகாப்புடனும், பிறருக்கு எவ்வித தாக்கமும் ஏற்படாத வகையிலும், இல்லாதவர்களுக்கு உதவும் வகையிலும் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவோம் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
(க.கிஷாந்தன்)