நல்லாட்சியில் பெருந்தோட்ட பெண்களின் வாழ்வில் சுபீட்சம் ஏற்படும் சோ.ஸ்ரீதரன் நம்பிக்கை!

0
104

பெருந்தோட்ட பெண்களின் நீண்ட கால எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றக்கூடிய காலம் தற்போது கனிந்துள்ளதால் இந்தப் பெண்களின் வாழ்வில் விரைவில் சுபீட்சத்தை எதிர்பார்க்கலாம் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் பிரிவினால் நுவரெலியா திருத்துவ கல்லூரி மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மகளிர் தின விழாவில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் பேசுகையில் கூறியதாவது :
பெண்களின் மகத்துவத்தைப் போற்றி அவர்களின் தேவைகள் , விருப்பங்கள் , உரிமைகள் என்பனவற்றை பெற்றுக்கொடுக்கும் வகையில் ஒவ்வொரு வருடமும் மார்ச்சு மாதம் 8 ஆம் திகதி சர்வதேச மகளிர் தினத்தை அனுஷ்டிக்கின்றோம். பல்வேறு வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட சர்வதேச மகளிர் தினத்துக்கு இவ்வருடத்துடன் 88 வருடங்கள் பூர்த்தியாகின்றன.
தொழிலாளர் தேசிய சங்கத்தைப் பொறுத்தவரைப் பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கும் ஓரமைப்பாகும். இந்தச்சங்கத்தின் தலைவர் அமைச்சர் திகாம்பரம் மலையகப் பெண்களின் சார்பாக மத்திய மாகாணத்தில் பெண் பிரதிநிதித்துவமொன்றை ஏற்படுத்திக்கொடுத்துள்ளார். இதே போல எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலிலும் பெண்களுக்கு உரிய இடத்தை வழங்குவதற்குத் தயாராகவுள்ளார்.

மலையகத்தில் வாழுகின்ற பெண் தொழிலாளர்களின் நீண்ட கால கனவு தமக்குச் சொந்த நிலமும் சொந்த வீடும் கிடைக்க வேண்டுமென்பதாகும். இந்தக் கனவை அமைச்சர் திகாம்பரம் தற்போது நனவாக்கிக் கொண்டு வருகின்றார். பெண்களும் அவர்களின் குடும்ப அங்கத்தவர்களும் வசதியுடன் வாழக்கூடிய தனி வீட்டுச்சூழல் தோட்டப்பகுதிகளில் ஏற்படுகின்ற பட்சத்தில் தான் பெண்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகளில் பலவற்றைப் பெறக்கூடிய நிலைமை ஏற்படும். இதனையே இன்றைய நல்லாட்சி அரசாங்கத்தில் நாம் செய்து கொண்டிருக்கின்றோம்.
இதே போல மலையகத்தில் வாழுகின்ற சகல பெண்களின் விமோசனத்துக்கும் எமது அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முறையாக அமுல் படுத்தப்படும்.

எமது சங்கத்தின் மகளிர் பிரிவு தலைவி சரஸ்வதி சிவகுரு பெண்களின் மேம்பாட்டுக்காக முனைப்புடன் செயற்பட்டு வருகின்றார். அவருக்கும் ஏனைய பெண்களுக்கும் எனது மகளிர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
மக்கள் பிரதிநிதி என்ற வகையில் பெண்களின் மேம்பாட்டுக்காக எனது சேவைகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வேன்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here