ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இரண்டு பிரதிநிதிகள் இலங்கைக்கு வந்து சென்றுள்ள நிலையில் இலங்கை அரசாங்கம் மீண்டும் ஒரு கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்றியுள்ளது.
ஜனாதிபதியின் செயலகப் பிரதிநிதிகள் கடந்த வாரம் யாழ்ப்பாணத்திற்குச் சென்று வலி வடக்கு பாதுகாப்பு வலயப் பகுதியையும்,அகதி முகாம்களையும் பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.
இந்த வருகையின் நோக்கமானது,தமிழ் மக்களின் பூர்வீக வாழ்விட நிலங்களை மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைப்பதும், அகதி முகாம்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் மக்களை மீள்குடியேற்றுவதுமே,ஜனாதிபதி செயலக அதிகாரிகளின் விஜயத்திற்கான நோக்கங்கள் என அரசாங்கம் வெளி உலகுக்கு காட்ட முற்படுகின்றது.
இதற்குக் காரணம் தொடர்ந்தும் தமது காணிகளை விடுவித்து தம்மை தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்ய வேண்டுமென தமிழ் மக்கள் வலியுறுத்தி வருவதை இலங்கை அரசாங்கம் செவிமடுத்து தமிழ் மக்களின் மீதான அக்கறையில் நடவடிக்கையில் இறங்கியுள்ளது என்று நம்பிவிடக் கூடாது.
தற்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தின் கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில்,கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் இலங்கை தொடர்பாக அமெரிக்கா தலைமையில் பரிந்துரைக்கப்பட்டு, இலங்கை அரசாங்கத்தின் பங்களிப்போடு தீர்மானம் நிறைவேற்றப்பட்ட, இறுதிக் கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாக கூறப்படுகின்ற போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் போன்றவற்றை விசாரிப்பதற்கான பொறிமுறை தொடர்பாக இலங்கை அரசாங்கம் அசமந்தப் போக்கையும், கால தாமதத்தையும் கொண்டிருப்பது தொடர்பாக அண்மையில் இலங்கை வந்திருந்த ஐ.நா அதிகாரிகள் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.
கலப்பு நீதிமன்றம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஐ.நா குழுவின் இரண்டு பிரதிநிதிகள் தமது ஆலோசனைககள்,கருத்துக்கள் உள்ளடங்கிய 46 பக்க அறிக்கையை இலங்கை அரசிடம் கைளித்துச் சென்றுள்ளனர். எதிர்வரும் 13ஆம் திகதி மனித உரிமைகள் ஆணையகத்தின் 32ஆவது அமர்வில் அந்த அறிக்கையை சம்ர்ப்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்துச் சென்றுள்ளனர்.
இந்த நிலையிலே இலங்கை அரசு நிலங்களை விடுவிப்பது, மீள்குடியேற்றம் என்பவற்றை நிறைவேற்றத் தொடங்கியுள்ளதாக ஒரு செய்தியை சர்வதேச சமூகத்திற்கு அனுப்ப முயற்சிக்கின்றது. ஆனால் மனித உரிமை ஆணையகமும், சர்வதேச சமூகமும் இலங்கை அரசிடமிருந்து எதிர்பார்ப்பதோ, இலங்கை அரசு ஏற்றுக் கொண்டபடியான பொதுநலவாய நாடுகளின் வழங்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றத்தை அமைப்பது தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் நகர்வுகளையே என்பதால் அது தொடர்பாகவே இலங்கை அரசாங்கம் தனது முன்னெடுப்புக்களைச் செய்யவேண்டும்.
அதைவிடுத்து காணிகளை பார்வையிடுவதும்,அகதி முகாம்களை பார்வையிடுவதும் சர்வதேச சமூகத்தை திருப்திப்படுத்தாது. மாறி மாறி ஆட்சிக்கு வரும் தென் இலங்கை அரசுகள் சொல்வது ஒன்றும், செய்வது வேறொன்றுமாக நடந்து கொள்வதாலேயே ஆரம்பத்தில் இணங்கி வருகின்ற சர்வதேச சமூகம் பின்னர் இலங்கை அரசுகளைவிட்டு கடந்த காலத்தில் தூரமாகிப் போயிருக்கின்றது.
தற்போது நல்லாட்சி என்று கூறினாலும், தமிழ் மக்களுக்கு இருக்கும் நல்லாட்சி அரசாங்கம் மீதான கசப்பான அனுபவங்களில் ஒன்று, ஜனாதிபதியே நிலங்களை உரியவர்களிடம் ஒப்படைக்குமாறு கூறினாலும், அல்லது அடையாளத்திற்கு ஒரு பகுதி நிலங்களை உரியவர்களுக்கு ஒப்படைத்திருந்தாலும் படையினர் அந்த உத்தரவை மதித்து செயற்பட்டதில்லை. அதையிட்டு அரசாங்கம் வாய் திறப்பதே இல்லை. தமிழ் மக்களின் நிலங்களை மீளவும் ஒப்படைப்பது, கைதிகள் விடுதலை இவ்வாறான விடயங்களைப் பொறுத்தவரை அரசாங்கம் வேறாகவும், படையினர் வேறாகவுமே செயற்பட்டு வருகின்றனர் என்பதை ஏற்கெனவே நாம் கூறியிருக்கின்றோம்.
மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால், மஹிந்த ராஜபக்ச என்ன உத்தரவை இடுகின்றாரோ அதை படையினர் நடைமுறைப்படுத்தினார்கள். ஆனால் நல்லாட்சி படையினர் அரசுக்கு கட்டுப்பட்டு நடப்பதாகத் தெரியவில்லை. ஒருவேளை தற்போதைய அரசு இரண்டு தலைமைத்துவங்களைக் கொண்டிருப்பதால் படைகள் இருவரையும் கையாளும் தந்திரோபாயத்தைக் கொண்டு இயங்குகின்றார்களோ என்றுகூட எண்ணத் தோன்றுகின்றது.
நல்லாட்சி அரசாங்கம் என்று வெளியில் கூறிக் கொண்டாலும்,பலத்த நெருக்கடிகளை எதிர்கொண்டபடியேதான் அரசாங்கம் போய்க் கொண்டிருக்கின்றது. நிதி அமைச்சர் மாற்றம், புதிய அமைச்சர்கள் நியமனம் என்று சில பிரச்சனைகளுக்கு ஜனாதிபதியும், பிரதமரும் தீர்வுகாண முடியாமல் இருக்கின்றார்கள்.
2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி மஹிந்த ராஜபக்சவை தோற்கடித்து ஜனாதிபதியாக பதவியேற்ற மைத்திரிபால சிறிசேனா தனது உரையில் இன்னொரு முறை ஜனாதிபதியாக போட்டியிட மாட்டேன் என்று கூறியிருந்தார். ஆனால் தற்போது, அடுத்த தேர்தலிலும் மைத்திரிபால போட்டியிடுவார் என்று சுதந்திரக் கட்சியினரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினரும் கூறிவருகின்றனர்.
அந்தக் கருத்தை ஜனாதிபதி மைத்திரிபால நிராகரிக்கவும் இல்லை. ஆனால் தொடர்ந்தும் தற்போதுள்ள ஜனாதிபதி அதிகாரங்களை தன்வசமே வைத்திருப்பதற்கும், அடுத்த தடவையும் ஜனாதிபதியாக போட்டியிடுவதற்குமான முன் தயாரிப்புக்கள் ஜனாதிபதி அல்லது அவரைச் சுற்றியுள்ளவர்களிளால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன.
இதற்கிடையே அடுத்ததாக தனித் தலைமையின் கீழ் ஆட்சியை அமைப்பதற்கான தேவையையும், அதற்கான திட்டங்களையும் சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் திரை மறைவில் முன்னெடுத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றது. ஐக்கிய தேசியக் கட்சியானது, தனியாக ஆட்சியை அமைக்குமாக இருந்தால், அதைப் பாதுகாக்கும் பங்களிப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்யும் என்று ஐக்கிய தேசியக் கட்சி நம்புகின்றது.
மறுபக்கத்தில் சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தனியாக ஆட்சியமைக்க முற்படுமாக இருந்தால்,அதற்கு தற்போதைய பொது எதிரணியை இணைத்துக் கொண்டாலும், மேலும் 20 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து உள்வாங்கிக் கொள்ள முடியும் என்று சுதந்திரக் கட்சி எதிர்பார்க்கின்றது.
இதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை பலப்படுத்துகின்ற மற்றும் ஒருங்கிணைக்கின்ற பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சுதந்திரக் கூட்டமைப்பின் இந்த முயற்சிகளின் பரிணாம வளர்ச்சியானது,மஹிந்த ராஜபக்சவை பிரதமராக முன்னிறுத்தி ஆட்சியைக் கைகப்பற்றுவதாக இருப்பதை சுதந்திரக் கட்சியின் சில அமைச்சர்களே வெளிப்படையாக கூறுமளவுக்கு நிலைமை உள்ளது.
உள்ளக அரசியல் இழுபறிகள் திமிறிக் கொண்டு வெளிக்கிளம்புமாக இருந்தால், சர்வதேச சமூகத்தின் இலங்கை தொடர்பான திட்டங்களும் எதிர்பார்ப்புக்களும் சிதறிப்போய்விடும் என்பதால், அத்தகைய குழப்பங்களுக்கு முன்னர் இலங்கை அரசாங்கம் மீதான தமது திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ளவே சர்வதேச சமூகமும் முற்படும்.
இந்த நிலைமையானது, குழப்பங்களைத் தீர்த்துக் கொண்டு ஏற்றுக் கொண்ட தீர்மானங்களை நிறைவேற்ற இலங்கைக்கு இன்னும் கால அவகாசம் தேவை என்ற கேள்விக்கு வலிமை சேர்க்கும். தவிர்க்க முடியாமல் அதற்கும் சர்வதேசம் தலையாட்டும் என்று இலங்கை ஆட்சியாளர்கள் கணக்குப் பார்க்கவும் இடம் இருக்கின்றது.