அரசாங்கத்தின் மோசமான பொருளாதாரக் கொள்கைகளால் நாடு பாரதூரமான பொருளாதார நெருக்கடிகளை சந்திக்க நேரிட்டுள்ளது. இந்த பொருளாதார நெருக்கடிகளை மத்தியதர வர்க்கத்தாலே எதிர்கொள்ள முடியாது போயுள்ள சூழலில் மிகவும் வருமானம் குறைந்த பெருந்தோட்ட மக்களால் எவ்வாறு சுமைகளை தாங்கிக்கொள்ள முடியும் என கேள்வியெழுப்பியுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆனந்தகுமார், உடனடியாக பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
சமகால பொருளாதார நெருக்கடிகள் தொடல்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர் மேலும் கூறியுள்ளதாவது,
கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் நாட்டில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. அதற்கு முன்னர் பொருளாதார முகாமைத்துவத்தை நான்கு வருடங்களாக பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் ஐ.தே.க மேற்கொண்டிருந்தது. கூட்டாட்சி உட்பட பல்வேறு அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் அத்தியாவசியப் பொருட்களுக்களில் விலைகளை அரசாங்கம் கட்டுப்பாட்டிலேயே வைத்தியிருந்தது. அதேபோல் அந்நிய கையிறுப்பும் போதியளவு பேணப்பட்டது.
ஆனால், சமகால ராஜபக்ஷர் அரசாங்கத்தின் தவறான பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் தீர்மானங்களால் ஆபிரிக்க நாடுகளை போன்றதொரு நிலைக்கு நாட்டை தள்ளியள்ளனர். அரசாங்கத்தின் வரிக் கொள்கைகள் மற்றும் பொருளாதார முகாமைத்துவம் தொடர்பில் ஆரம்பத்திலேயே ஐ.தே.க எச்சரித்திருந்தது. ஆனால், நிபுணர்கள் முதல் எவருடைய ஆலோசனைகளை கண்டுகொள்ளாது தான்தோன்றித்தனமாகவே அரசாங்கத்தின் தீர்மானங்கள் அமைந்திருந்தன.
பெட்ரோல், டீசல் தொடர்பில் முறையான பொறிமுறையொன்று எமது அரசாங்கத்தில் காலத்தில் பேணப்பட்டது. இன்று அவ்வாறில்லை. கடந்த சில வாங்களாக பெற்றோல் டீசலின் விலை உலக சந்தையில் அதிகரித்திருந்தது. அதைபோல் உள்நாட்டு சந்தையிலும் பன்மடங்களாக எரிபொருள் விலையை உயர்த்தியிருந்தனர். ஆனால், தற்போது கச்சா எண்ணையின் விலை 100 டொலர்களையும்விட குறைவடைந்துள்ளது. எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட வேகத்தில் குறைக்கப்பட்டுள்ளதா?. இல்லை. இதன் சுமைகளை மக்களே தாங்கிக்கொள்ள வேண்டியுள்ளது.
அத்தியாவசியப் பொருட்கள், மரக்கறிகளின் விலைகளும் மக்களால் கொள்வனவு செய்ய முடியாதளவு உயர்வடைந்துள்ளது. காலை ஒருவிலை மாலை ஒருவிலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. 15ஆயிரத்திற்கும் குறைவான சம்பளத் தொகைளை பெறும் பெருந்தோட்ட மக்களால் இந்த விலையேற்றத்தை எவ்வாறு சமாளி;க்க முடியும். மானிய விலையில் இவர்களுக்கு வழங்கப்படும் கோதுமை மாவும் தரமற்றதாக உள்ளது. ஆகவே, கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசாங்கம் விசேட பொருளாதாரத் திட்டங்களை முன்மொழிந்து உடனடியாக அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் நாட்டில் பட்டினிச் சாவுகள்தான் அதிகரிக்குமென எஸ்.ஆனந்தகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.