நாட்டை நடத்தக்கூடிய வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றி பெற செய்வதே புத்திசாலித்தனமான முடிவாகும்.” என கம்பளையில் இடம்பெற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் “இயலும் ஸ்ரீலங்கா” பிரசார கூட்டத்தில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில், மக்கள் மத்தியில் பிரபல்யமாக இருந்த கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்ப்பாளர் ஆக்கினார்கள். அவரே வெல்லக்கூடியவர் என்று வாக்களித்து வெற்றிபெறவும் செய்தார்கள். ஆனால் அவருக்கு நாட்டை ஆளும் இயலுமை உள்ளதா என்பதை பார்க்கவில்லை. ஆட்சியை கொண்டுநடத்தும் அனுபவம் மற்றும் அறிவு உள்ளதா என்பதை பார்க்கவில்லை. சர்வதேச ரீதியான ராஜதந்திர தொடர்புகள் உள்ளதா என்பதையும் பார்க்கவில்லை. அதன் விளைவாக நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டது. நாம் வீடுகளில் இருந்ததை விட வீதிகளில் இருந்த நேரமே அதிகமாக இருந்தது. இந்த வாக்களிப்பில் இருந்து நாம் ஒரு பாடத்தை கற்றுக்கொள்ள வேண்டும். பிரபல்யமானவருக்கு வாக்களிப்பதல்ல புத்திசாலித்தனமானது. நாட்டை நடத்தக்கூடிய வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றி பெற செய்வதே புத்திசாலித்தனமான முடிவாகும்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டு, மக்கள் போலீன் வரிசைகளில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்ப்பட்டது. இதன் போது, இன்று இந்த ஜனாதிபதி கதிரைக்கு ஆசைப்படுகின்ற எவரும், நாட்டையோ, மக்களையோ காப்பாற்ற முன்வரவில்லை. தமது அரசியல் எதிர்காலத்தை பற்றி மட்டுமே யோசித்து ஒதுங்கிக்கொண்டார்கள். மக்களை துன்பத்தில் இருந்து மீட்க முன்வந்த ஒரே தலைவர் ரணில் விக்ரமசிங்க அவர்களே. நாடு ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்ட போதே, சரியான தலைவர் யார் என்பதை நாட்டு மக்கள் தெரிந்துகொள்ள முடிந்தது.
நாட்டு மக்கள் ஒரு போதும் ரணில் விக்ரமசிங்கவிற்கு வாக்களித்து அவரை ஜனாதிபதியாக்குவதற்கு முன்வரவில்லை. ஆனால் முழு நாடும் கஷ்டத்தில் விழுந்த போது அவரே முன்வந்து நாட்டு மக்களை காப்பாற்றினார். அதன் மூலம் அவருக்கே இன்றைய பொருளாதார நிலையில் நாட்டை ஆளும் இயலுமை உள்ளது என்பதை உறுதி செய்திருக்கின்றார். இந்த நேரத்தில், அன்று ஆபத்தான நேரத்தில் தலைமறைவாக நின்றவர்கள் ஆசை காட்டும் வாக்குறுதிகளோடு மக்களிடம் வருகின்றார்கள். அவர்களின் கற்பனை கதைகளை கேட்டு மீண்டும் இன்னொருமுறை ஏமாற போகிறோமா, இல்லை செய்து காட்டி, நிஜத்தை பேசும் ரணிலை புத்திசாதூர்யமாக வெற்றி பெற செய்யப்போகிறோமா என்பதே இத்தேர்தலின் முடிவாகப்போகிறது. எனவே நாம் நிஜத்தோடு பயணிப்போம், நாம் யதார்த்தத்தோடு முன் செல்வோம். எமது மனசாட்சியை தட்டி கேட்டு, எம்மை காப்பாற்றிய தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு வாக்களிப்பதே எமக்கும் நல்லது, எமது நாட்டுக்கும் நல்லது.