மஹியாங்கனை பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு மணல் ஏற்றிச்சென்ற லொறி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.குறித்த விபத்து இன்று (24) அதிகாலை 4.00 மணியளவில் நானுஓயா டெஸ்போட் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ் விபத்தினால் நுவரெலியா – தலவாக்கலை ஏ – 7 பிரதான வீதி வழியான போக்குவரத்து ஒரு மணித்தியாலம் பாதிக்கப்பட்டது.எனினும் பிரதேசவாசிகளின் ஒத்துழைப்புடன் உடனடியாக வீதியில் கொட்டிய மணலை அகற்றி வீதியின் போக்குவரத்தினை வழமைக்கு கொண்டு வந்தனர்.
விபத்து சம்பவித்த போது லொறியில் சாரதி மட்டும் பயணித்துள்ளதாகவும், அவர் தெய்வாதீனமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்டுகிறது.லொறியில் திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாத காரணத்தால் வீதியில் குடைசாய்ந்துள்ளது எனவும் இதனால் லொறியில் இருந்த 3 கியூப் மணலில் 1 கியூப் மணல் வீதியில் கொட்டியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.