நானுஓயா பிரபல பாடசாலை ஒன்றின் கட்டிடத்தின் மீது பயன்படுத்தக் கூடிய மாணவர் மேசை நாற்காலிகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதாக பெற்றோர் விசனம் தெரிவித்துள்ளனர்.
நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட பெரும்பாலான பாடசாலைகளில் மாணவர் தொகைக்கேற்ப மாணவர் மேசை நாற்காலிகள் காணப்படுவதில்லை.
குறிப்பாக பெருந்தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த பாடசாலைகளில் தளபாடங்கள் (மேசை, நாற்காலிகள் ) பற்றாக்குறைவாகவே காணப்படுகின்றன.
இது தொடர்பாக ஒவ்வொரு வருடமும் கல்வி அமைச்சின் ஊடாக தளபாடங்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு விண்ணப்பங்கள் மாத்திரமே கோரப்படுகின்றன. ஆனால் அவை பெரும்பாலும் நிவர்த்தி செய்யப்படுவதில்லை.
பெரும்பாலான நகர் புற பாடசாலைகளில் தளபாடங்கள் மாணவர் எண்ணிக்கைக்கு அதிகமாகவே காணப்படுகின்றன.
நானுஓயா பிரதேசத்தில் பிரபல பாடசாலை ஒன்றின் கட்டிடங்களில் பயன்படுத்தக் கூடிய மாணவர் மேசை, நாற்காலிகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
இவைகள் அனைத்தும் பயன்படுத்தாமல் வெளியிலே அடுக்கி வைக்கப்பட்டுள்ளமையால் மழைக்காலங்களில் நனைந்து வீணாகுவதோடு மட்டுமல்லாமல் காலப்போக்கில் இவை அனைத்தும் உடைந்து நாசமாகிவிடும்.
இன்றைய சூழ்நிலையில் நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட எத்தனையோ பெருந்தோட்ட பாடசாலைகளில் மேசை, நாற்காலிகள் இல்லாமல் மாணவர்கள் தரையில் அமர்ந்து கல்வி கற்கின்றனர். ஆனால் பெரும்பாலான பாடசாலைகளில் மாணவர்கள் பயன்படுத்தும் வளங்கள் முறையாக பயன்படுத்தப்படாமல் அழிக்கப்படுகின்றன.
இவற்றை பாடசாலை அதிபர்களோ, ஆசிரியர்களோ, கல்வி அதிகாரிகளோ சிந்திப்பதில்லை.
மேலதிகமாக தளபாடங்கள் காணப்படுகின்ற பாடசாலைகளிலிருந்து தளபாடங்கள் பற்றாக்குறையாக இருக்கின்ற பாடசாலைகளுக்கு கொடுத்து உதவலாம்.
இதனை கல்வி அதிகாரிகள் செயற்படுத்த முடியும். ஆனால் அவர்கள் இதனை செய்ய தவறுகின்றனர்.
எனவே எதிர்காலங்களில் பொதுச் சொத்துக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை சம்பந்தப்பட்டவர்கள் மேற்கொள்ள வேண்டும்.
மேலும் பெருந்தோட்ட பாடசாலை மாணவர்களின் நலன் கருதி வேறு பாடசாலைகளில் உடைந்து பயன்படுத்த முடியாமல் காணப்படுகின்ற பழுதடைந்த மேசை, நாற்காலிகளை திருத்தியமைத்து மாணவர்கள் பயன்படுத்தும் வண்ணம் கொடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் இன்று பல நகர்புற பாடசாலைகளில் பொதுச் சொத்துக்கள் நாசமாகிக்கொண்டிருக்கின்றன.
இதனை பாதுகாத்து மீட்டெடுத்து வளங்கள் இல்லாத பாடசாலைகளுக்கு கொடுத்துதவ நுவரெலியா கல்வி வலய அதிகாரிகள் முன்வரவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்