தனது வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளில் ஒன்றான நாய்க்கு உணவு வைக்கும் கோப்பையில் தன்னுடைய பேத்திக்கு, உணவு கொடுத்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், அந்த பேத்தியின் பாட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் வெயாங்கொட வதுரவ எனுமிடத்திலேயே இடம்பெற்றுள்ளது.
பெற்றோர் இன்மையால் சிறு வயதுமுதல் சிறுவர் அபிவிருத்தி மத்திய நிலையத்தில் வளர்ந்து தற்போது 14 வயது சிறுமியானதன் பின்னர், தன்னுடைய வயோதிப பாட்டியை பார்ப்பதற்காக அச்சிறுமி பாட்டியின் வீட்டுக்கு அண்மையில் சென்றுள்ளார்.
வீட்டுக்குச் சென்ற சிறுமிக்கு, தன்னுடைய வீட்டில் வளர்க்கும் நாய்க்கு உணவளிக்கும் கோப்பையில் உணவை போட்டுக்கொடுத்து, சாப்பிடுமாறு அச்சுறுத்தியது மட்டுமன்றி, தூசணத்தால் பாட்டி தூற்றியுள்ளார். அத்துடன் வீட்டை விட்டு உடனடியாக வெளியேறுமாறும் கத்தியுள்ளார்.
இவ்விவகாரம் பொலிஸாரின் காதுகளுக்குச் சென்றுள்ளது.
இந்நிலையில், தன்னுடைய 14 வயதான பேத்தியை மானப்பங்கம் படுத்தும் வகையில் செயற்பட்டார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் 73 வயதான வயோதிப பெண்ணை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சிறுமிக்கு மூத்த சகோதரி ஒருவர் இருக்கிறார். எனினும், தன்னுடைய பெற்றோர் தொடர்பில் இவ்விருவருக்கும் எவ்விதமான ஞாபகமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.