நியாயமான சம்பள உயர்வு கிட்டும்வரை எமது போராட்டம் ஓயாது! வேலுகுமார் சூளுரை!

0
175

தோட்டத்தொழிலாளர்களுக்கு நியாயமானதொரு சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்கும்வரை தமிழ்முற்போக்கு கூட்டணியின் போராட்டம் ஓயாது என்று கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான வேலு குமார் சூளுரைத்துள்ளார்.

தோட்டத்தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணக் கொடுப்பனவாக ரூ. 2 ஆயிரத்து 500 ரூபாவை உடன் வழங்குமாறு வலியுறுத்தி கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னால் இன்று நடைபெற்ற அஹிம்சை வழிப்போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு:-

2013 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தம் 2015 மார்ச் 31 ஆம் திகதியுடன் காலாவதியானது. இந்நிலையில், கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள், முதலாளிமார் சம்மேளனத்துக்கு விலைபோகும் வகையில் செயற்பட்டன. இரகசிய பேச்சுகள் நடத்தப்பட்டு சம்பள எல்லை நிர்ணயிக்கப்பட்டது. குறுகிய அரசியல் நோக்கத்துக்காக தொழிலாளர்கள் காட்டிக்கொடுக்கப்பட்டுவிட்டனர். இதன்விளைவாகத்தான் இன்றும் கூட்டு ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாமலுள்ளது.

தோட்டத்தொழிலாளர்களுக்கு அசெளகரியம், பொருளாதாரரீதியில் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகிறது. மலையக மக்களின் பிரச்சினைகள் தலைநகருக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இது எமது போராட்டத்தின் புதுவடிவமாகும். அரசுக்கும், கம்பனிகளுக்கும் தொடர் அழுத்தம் கொடுப்போம்.

இடைக்கால, நீண்டகால தீர்வுகளை நோக்கி நகரவேண்டியுள்ளது. உறுதியான தீர்வு கிடைக்கும்வரை போராடுவோம்.போராட்ட வழிமுறைகளை விரிவுப்படுத்துவோம் என்றார் வேலுகுமார் எம்.பி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here