நில்வளா கங்கையில் தடுப்பணையில் உள்ள ஒரு பகுதியை மாற்றுவதற்கும் கிளை ஆற்றில்உள்ள தடைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை

0
79

மாத்தறை நில்வளா கங்கையில் தடுப்பணையில் உள்ள ஒரு பகுதியை மாற்றுவதற்கும் கிளை ஆற்றில் உள்ள தடைகளை அகற்றுவதற்கும் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் இன்று (09.10.2023) இடம்பெற்ற விசேட கூட்டத்தின் போது தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் மாத்தறை மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்நிலையில் நில்வளா கங்கையில் அமையப்பெற்றுள்ள தடுப்பணையால் தான் இந்த நிலைமை என மக்கள் தரப்பிலிருந்து குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

வறட்சி காலத்தில் கடல் நீர் ஆற்றுடன் வந்து கலக்காமல் இருப்பதற்காகவும், சுத்தமான குடிநீர் பெரும் நோக்கிலும் தான் இந்த தடுப்பணை அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

இந்நிலையில் மாத்தறை மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்த நிலைமையை கட்டுப்படுத்துவதற்கான குறுகிய கால மற்றும் நீண்ட கால தொழில்நுட்ப ரீதியிலான தீர்வை காண்பதற்கான விசேட கூட்டம் ஒன்று இன்று (09.10.2023) நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சில் நடைபெற்றது.

இந்த விசேட கூட்டத்தில் அமைச்சருடன், மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, நீர்ப்பாசனத்துறை இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச, பாராளுமன்ற உறுப்பினர்களான நிபுண ரணவக்க, புத்திக பத்திரண, நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அதிகாரிகள், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள், நீர்ப்பாசனத்துறை அமைச்சின் அதிகாரிகள், மாத்தறை மாவட்ட செயலாளர் உட்பட அதிகாரிகள், பொறியியலாளர்கள் என முக்கியஸ்தர்கள் கலந்துக் கொண்டனர்.

இக்கூட்டத்தின் போது வெள்ள அனர்த்தங்களை கட்டுப்படுத்துவதற்காக குறுகிய கால மற்றும் நீண்ட கால தொழில்நுட்ப ரீதியில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டன.

இவ்வேளையிலேயே அந்த தடுப்பணையில் ஒரு பகுதியை மாற்றுவதற்கும் அந்த ஆற்றில் உள்ள தடைகளை அகற்றுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொறியியலாளர்களின் மேற்பார்வையின் மூலம், இராணுவம் மற்றும் கடற்படையில் உள்ள அதிகாரிகளின் உதவியுடன் இந்த ஆரம்பக்கட்ட வேலைகளை ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

அதேபோல எதிர்காலத்தில் இவ்வாறானதொரு நிலைமை ஏற்படாதிருப்பதற்காக எவ்வாறான திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்பது தொடர்பில் நீர்வழங்கல் அமைச்சும், நீர்ப்பாசனத்துறை அமைச்சும் இணைந்து ஒரு கூட்டு அமைச்சரவை பத்திரத்தை முன்வைக்கவும் கொள்கை ரீதியில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here