முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம மாவத்தையில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்திற்கு நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி பொய்யானது என, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இந்தச் செய்தி தொடர்பிலான விசாரணையின் போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அருகாமையில் உள்ள மற்றுமொரு இடத்தில் நிலுவைத்தொகை செலுத்தப்படாததன் காரணமாக நேற்று (13) நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்ததாக சபை கூறியுள்ளது.
ஆனால் அந்த இடம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லம் அல்ல என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு திணைக்கள அதிகாரி ஒருவரிடம் நீர் வழங்கல் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் மேற்கொண்ட விசாரணையின் போது, முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் அந்த இடத்தில் தங்கியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் கடந்த ஆண்டு ஒக்டோபரில் அந்த இடத்தை விட்டு வெளியேறினர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு உத்தியோகத்தரோ அல்லது முன்னாள் ஜனாதிபதியோ அந்த இடத்தில் உள்ள நீர் விநியோகத்தில் உள்ள தண்ணீரை பயன்படுத்தமாட்டார்கள் என பாதுகாப்பு அதிகாரி கூறியதாகவும், நீர் வழங்கல் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, குறித்த இடத்தில் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டமையால் முன்னாள் ஜனாதிபதிக்கோ அல்லது அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கோ எவ்வித இடையூறும் ஏற்படவில்லை என, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.