நுவரெலியா மாவட்டத்தில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் துரிதமாக நிவாரணம் வழங்க வேண்டும்:

சீரற்ற காலநிலையால் நுவரெலியா மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் உரிய நிவாரணங்களை வழங்க வேண்டும்
என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கை ஒன்றில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:“நுவரெலியா மாவட்டம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக நாட்டு மக்கள் பல்வேறு அசெளகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் அடைமழை ,பலத்த காற்று ,ஆற்று வெள்ளம் ,மண் சரிவு போன்றனவற்றால் பலர் பாதிப்பு அடைந்துள்ளனர்.
உயிர் சேதங்களும் உடமை சேதங்களும் ஏற்பட்டுள்ளன.

இவ்வாறான சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட தமக்கு அரசாங்கத்தின் மூலம் உடனடி நிவாரணம் கிடைக்கவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் எங்களுடைய கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா,அம்பகமுவ, கொத்மலை
ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலே அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
எனினும் பாதிக்கப்பட்டவர்களின் தொடர்பில் இந்தப் பிரதேச செயலகங்களின் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுப்பது இல்லை என மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்தி நுவரெலியா மாவட்டத்தில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் ”
என்று சோ. ஸ்ரீதரன் குறிப்பிட்டுள்ளார்