நுவரெலியா மாவட்டம் – இடைவிடாது பெய்து வரும் பலத்த மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

0
30

நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா, அம்பகமுவ, கொத்மலை, ஹங்குராங்கெத்த, வலப்பனை ஆகிய பிரதேசங்களில் (25) இரவு முதல் இடைவிடாது பெய்து வரும் பலத்த மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.அதேநேரத்தில் நுவரெலியா மாவட்டத்தில் கந்தப்பளையில் அதிக மழை பெய்து வருவதுடன் தாழ் நில பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இதனால் பல ஏக்கர் விவசாய நிலங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

கந்தபளை பிரதேசத்தில் கல்பாலம பிரதேசம் முற்றாக வெள்ளத்தில் மூழ்கியதால் அப்பகுதியின் தாழ்வான நிலங்களில் அமைந்துள்ள பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் மரக்கறி பயிர்களும் பாரியளவில் சேதமடைந்துள்ளது.அத்தோடு, பெய்த கடும் மழை காரணமாக உடப்புசல்லாவ – நுவரெலியா ஊடான போக்குவரத்து தடைப்பட்டது.

அத்துடன், கந்தப்பளை கோர்ட்லோட்ஜ் சந்தியில் பிரதான வீதிக்கு மேலாக வெள்ளநீர் போவதினால் போக்குவரத்து தடைப்பட்டதுடன் சில வீதிகள் சேதமடைந்துள்ளது. சில பிரதான வீதி பகுதிகளில் முற்றாக வெள்ளம் சூழ்ந்துள்ளதனால் வீதி அருகில் உள்ள வடிகான்களை அவதானிக்க முடியாத நிலையில் மக்கள் விபத்தினை எதிர்கொள்ளும் நிலையும் உருவாகியுள்ளது.

குறிப்பாக உடப்புசல்லாவ , இராகலை , கந்தப்பளை நகரில் இருந்து நுவரெலியாவிற்கு செல்லும் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஏனைய அரச திணைக்களங்களுக்கு அன்றாடம் தங்களின் சேவையினை பெறச் செல்லும் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

அத்தோடு, நுவரெலியா ரேஸ்கோர்ஸ் மற்றும் விக்டோரியா பூங்கா என்பன நீரில் மூழ்கியுள்ளதோடு, அதன் அருகில் உள்ள பல வீடுகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது..

நுவரெலியா பிரதேசத்திலுள்ள பரீட்சை நிலையங்களுக்கு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுகின்ற வெள்ளம் சூழ்ந்த கந்தபளை மாணவர்களை பிரதேசத்திலுள்ள கனரக வாகனங்களைப் பயன்படுத்தி பரீட்சை நிலையங்களுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

(க.கிஷாந்தன், டி.சந்ரூ)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here