நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர்கள் சங்கம் ஜனாதிபதியிடம் கையளித்த மகஜர் தொடர்பான விபரம்!

0
108

நாடுபூராகவும் பிரதேச ஊடகவியலாளர்களாக செயற்படுகின்றவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்கும் அவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கும் முகமாக அரசாங்கம் குழு ஒன்றை நியமிக்க வேண்டும் என நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் சங்கம் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்து மகஜர் ஒன்றை கையளித்துள்ளது.

அண்மையில் மதுவற்ற நாடு எனும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்கு நுவரெலியாவிற்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் டக்ளஸ் நாணயக்கார மற்றும் செயலாளர் சுப்பிரமணியம் தியாகு ஆகியோர் இணைந்து இந்த மகஜரை கையளித்துள்ளனர்.

இந்த மகஜரில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நுவரெலியா மாவட்டத்தில் இலத்திரன் மற்றும் அச்சு ஊடகங்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற தமிழ், சிங்கள ஊடகவியலாளர்கள் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தமது ஊடக சேவையை முன்னெடுத்து வருகின்றார்கள். அதற்கு காரணம் பொது மக்களுக்கு அன்றாடம் நடைபெறுகின்ற விடயங்களை கொண்டு செல்ல வேண்டும் என்ற உயரிய நோக்கத்திலேயே.

இந்த ஊடகத்துறையில் ஈடுபட்டிருக்கின்ற ஊடகவியலாளர்கள் அதிகமானவர்கள் முழு நேர ஊடகவியலாளர்களாக செயற்பட்டு வருகின்றனர்.

பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கின்ற இவர்கள் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக கூடுமானவரை அவற்றை வெளிக் கொனர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திணைக்களங்கள் ஊடாக கூடுமானவரை அவர்களின் தகுதிக்கு ஏற்ற வகையில் தீர்வினையும் பெற்றுக்கொடுத்திருக்கின்றார்கள்.

அவ்வாறன ஒரு நிலையில் கடந்த பல வருடங்களாக பிராந்திய ஊடகவியலாளர்களாக செயற்படுகின்ற எமது மாவட்டம் உட்பட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள பிராந்திய ஊடகவியலாளர்களின் பிரச்சினைகளுக்கு இதுவரை எந்த ஒரு அரசாங்கமும் ஒரு தீர்வையோ அல்லது அவர்கள் தொடர்பாக ஆராய்ந்து பார்ப்பதற்கோ ஒரு கடுகளவேனும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை துயரத்துடன் உங்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.

கடந்த அரசாங்கம் ஊடகவியலாளர்களுக்காக தீர்வையற்ற வாகனம் வழங்குவதாக அறிவித்த பொழுதும் அது இதுவரையில் எமது மாவட்டம் உட்பட எந்த ஒரு மாவட்ட ஊடகவியலார்களுக்கு கிடைக்கவில்லை. அது ஒரு கண்மூடி வித்தையாகவே இருந்துள்ளது.

மேலும் இந்த அரசாங்கம் வழங்குவதாக கூறிய மோட்டார் சைக்கிளையும் இதுவரையில் எமது மாவட்டத்தில் இருக்கின்ற எந்த ஒரு ஊடகவியலாளர்களுக்கும் கிடைக்கவில்லை. காரணம் அங்கு குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் பிராந்தி ஊடகவியலாளர்களால் பூர்த்தி செய்ய முடியாத ஒரு நிலையே காணப்படுகின்றது.

இன்றைய இந்த விஞ்ஞான உலகத்தில் கணனித்துறையில் பல்வேறு அபிவிருத்திகளை கண்டிருந்தாலும் எமது ஊடகவியலாளர்கள் மிகவும் குறைவான வசதிகளுடன் அதிகூடிய சேவை ஒன்றை வழங்கிவருகின்றார்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள்.

எனவே ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவிற்கு எமது வேண்டுகோள்
எமது மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு அவர்களுக்கென சொந்த காணியோ, வீடுகளோ இல்லாத ஒரு நிலை இருக்கின்றது.

மேலும் அவர்கள் தமது அன்றாட செயற்பாடுகளின் பொழுது சாதாரண போக்குவரத்து சேவையையே பாவிக்க வேண்டிய ஒரு நிலை இருக்கின்றது.

எனவே உங்கள் தலைமையிலும் பிரதமரின் வழிகாட்டலிலும் அமைக்கப்பட்டுள்ள இந்த நல்லாட்சி அரசாங்கம் எமது இந்த பிரதேச ஊடகவியலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு ஒன்றை பெற்றுத் தருவீர்கள் என எதிர்பார்க்கின்றோம்.

இந்த வகையில்,

1.சொந்த காணியற்ற பிரதேச ஊடகவியலாளர்களுக்கு சொந்த காணியை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்தல்.

2.எமது தொழில் துறைசார்ந்த ஊடகத்துறைக்கான கருவிகளை தீர்வையற்ற முறையில் பெற்றுக் கொடுக்க    நடவடிக்கை எடுக்கின்றமை.

3.எமது போக்குவரத்திற்காக தனியார் அரச துறைகளில் போக்குவரத்தறிகான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க    நடவடிக்கை எடுக்கின்றமை.

4. நாடுபூராகவும் பிரதேச ஊடகவியலாளர்களாக செயற்படுகின்றவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்கும் அவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கும் முகமாக அரசாங்கம் குழு ஒன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆகிய விடயங்கள் இந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பா. திருஞானம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here