நுவரெலியா முகவாயிலில் உள்ள இந்து ஆலயம் அகற்றப்படமாட்டாது; நவீன் தெரிவிப்பு!

0
150

நுவரெலியா நகரில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த இந்து ஆலயத்தை நுவரெலியா மாநகர சபை ஆணையாளர் அகற்றுவதற்கு எடுத்துள்ள நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி இணைப்புக் குழு கூட்டம் இன்று நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டம் இணைப்புக் குழு தலைவர்களான அமைச்சர் நவீன் திசாநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆறுமுகன் தொண்டமான், கே.கே.பியதாச ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர்களான முத்து சிவலிங்கம், மயில்வாகனம் திலகராஜ், மத்திய மாகாண விவசாயத்துறை அமைச்சர் மருதுபாண்டி ரமேஸ்வரன் நுவரெலியா மாவட்ட செயலளார் .எலன் மீகஸ்முல்ல உட்பட அரச திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் நவீன் திசாநாயக்க, நுவரெலியா நகரத்தை பொறுத்த அளவில் அனைத்து மக்களும் ஒற்றுமையுடன் வாழ்கின்றார்கள்.

எனவே இங்கிருக்கின்ற ஆலயத்தை அகற்றுவது தமிழர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே ஆலயத்தை மட்டுமல்ல விகாரைகளையோ அல்லது வேறு எந்த ஒரு விதமான வணக்கஸ்தலங்களையோ அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டாம் எனத் தெரிவித்தார்.

இதனை கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் ஏற்றுக் கொண்டதுடன் இனிமேல் அவ்வாறான செயற்பாடுகள் நடைபெற கூடாது எனவும் குறிப்பிட்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முத்து சிவலிங்கம், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான பிலிப், கணபதி கனகராஜ் ஆகியோர்,

தற்பொழுது பெருந்தோட்ட துறையில் அமைக்கப்பட்டு வருகின்ற தனி வீட்டுத் திட்டமானது தொழிற்சங்க ரீதியாக அமைக்கப்பட்டு வருவதாகவும் இதன் மூலம் பெருந்தோட்ட வீடற்ற மக்களுக்கு இந்த வீடமைப்பு திட்டம் சென்றடையவில்லை என்றும் குறிப்பிட்டனர்..

அத்துடன் இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்டு வருகின்ற வீடுகளும் கட்சி ரீதியாகவும் தொழிற்சங்க ரீதியாகவும் மாத்திரமே அமைக்கப்பட்டு வருவதாகவும் இதற்கு உடனடியாக ஒரு குழு ஒன்றை அமைத்து விடயங்களை ஆராய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைத்தனர்.

இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் மற்றும் மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் ஆகியோர், வீடமைப்பு திட்டம் எந்தவிதமான கட்சி மற்றும் தொழிற்சங்க பேதமும் இன்றி நடைமுறைபடுத்தப்பட்டு வருகின்றது.

கடந்த காலங்களில் அமைச்சர்களாக இருந்தவர்கள் இந்த மக்களுக்காக எதனையும் செய்யவில்லை. ஆனால் தற்பொழுது அமைச்சர் திகாம்பரம் அனைவருக்கும் பொதுவாக கட்சி தொழிற்சங்க பேதங்களை மறந்து இந்த திட்டத்தை மிகவும் சிறப்பாக முன்னெடுத்து வருகின்றார்.

இதனை பொறுத்து கொள்ள முடியாத ஒரு சிலரே இந்த திட்டத்தை குழப்புவதற்கு வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

எனவே தயவு செய்து பொய்யான வதந்திளை பரப்பி இந்த திட்டத்தை குழப்ப வேண்டாம். ஏனென்றால் எமது மக்கள் கடந்த 200 வருடங்களாக பட்ட துன்பங்களுக்கு தற்பொழுது விடுதலை கிடைத்து வருகின்றது.

குறிப்பாக இந்திய அரசாங்கத்தின் வீடமைப்பு திட்டமானது மிகவும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

எனவே இந்த திட்டம் மட்டுமல்ல எந்த திட்டமாக இருந்தாலும் அது பொதுவாக எல்லோரையும் சென்றடையும் வகையிலேயே நாம் செயல்படுகின்றோம்.

அதில் எந்த விதமான கட்சி தொழிற்சங்க பேதங்களும் இல்லை என்பதை என்னால் நிருபிக்க முடியும் என தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here