நுவரெலியா விவசாயிகளின் உயிரை பாதுகாப்பதற்கு அரசாங்கமும் நிதி அமைச்சும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கல்வி இராஜாங்க அமைச்சர வே.இராதாகிருஸ்ணன்
நுவரெலியா விவசாயிகளின் உயிரை பாதுகாப்பதற்கு அரசாங்கமும் நிதி அமைச்சும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான வீ.எஸ்.இராதாகிருஷ்ணன் தொலைநகல் கடிதம் மூலமாக நேற்று (22.02.2018) வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நுவரெலியா விவசாயிகள் தாங்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் விவசாயம் செய்து தற்பொழுது உருளை கிழங்கு அறுவடை நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற போது அரசாங்கம் உருளை கிழங்கு இறக்குமதி செய்வதன் காரணமாகவும் இறக்குமதி வரி குறைக்கப்பட்டதன் காரணமாகவும் உரிய விலை கிடைக்காததன் காரணமாக செய்வதறியாது திகைத்துள்ளனர்.
நுவரெலியா மக்களின் விவசாயம் மாத்திரமே அநேகமானவர்களின் வாழ்வாதாரத்தை கொண்டு செல்கின்ற ஒரேயொரு வருமானம் பெறக்கூடிய வழியாகும். குறிப்பாக உருளைக் கிழங்கு உற்பத்தியின் மூலமே தங்களுடைய வருமானத்தை பெறுக் கொள்ள முடியும். இன்று ஏற்பட்டுள்ள இந்நிலை காரணமாக தங்களுடைய உயிரை மாய்த்து கொள்வதற்கும் தயாராக இருக்கின்றனர். அவர்களின் வீடு வாகனம் நிலம் அனைத்தையும் இழந்து நடுப்பாதைக்கு வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த விடயங்களை கருத்தில் கொண்டும் விவசாயிகளின் உயிர்களை பாதுகாக்கும் வகையில் உடனடியாக அரசாங்கம் உருளைக் கிழங்கு இறக்குமதியை நிறுத்தவும் உருளை கிழங்கு இறக்குமதிக்கான வரியை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நானும் அமைச்சர் ரவீந்திர சமரவீரவும் நிதி அமைச்சரும் பாராளுமன்ற கட்டிட தொகுதியில் (2018.02.20) தங்களுடன் இது தொடர்பாக கலந்துரையாடியதையும் இவ்விடத்தில் குறிப்பிட விரும்புகின்றேன் எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பா.திருஞானம்