நூரி தோட்ட மக்களின் அவல நிலை காற்றில் அள்ளுண்டுப்போன கூரைத்தகடுகள்!

0
122

கேகாலை மாவட்டம் தெரணியகலை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட நூரி தோட்ட மக்களின் வாழ்வாதார நிலை இன்று கேள்விக்குறியாகியுள்ளது. கடந்த காலங்களில் இத்தோட்ட மக்கள் தெரணியகலை பிரதேசசபையின் முன்னாள் தலைவராக இருந்த அத்தகொட்டா என அழைக்கப்படும் அனில் சம்பிக்க விஜேசிங்க மற்றும் அவரின் அடியாட்களின் அடாவடித்தனங்களால் சொல்லனா துயரங்களை அநுபவித்து வந்தனர். தோட்ட பொதுமுகாமையாளர் நிஹால் பெரேராவின் கொலை வழக்குடன் அவரும் அவரது அடியாட்களும் மரணத்தண்டனைக்கு ஆட்ப்பட்டதன் விளைவாக இத்தோட்ட மக்கள் நிம்மதியாக வாழ்ந்துவந்த சூழ்நிலையில் இன்று இயற்கை இவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.

20180302_145656

கடந்த 01ஆம் திகதி இரவு ஏற்பட்ட கடும் காற்றுடன் கூடிய கனமழையில் நூரி தோட்ட மக்களின் லயத்துக் கூரைத்தகடுகள் காற்றில் அள்ளுண்டுப் போனதுடன், குடியிருப்பு மீது மரங்கள் விழுந்து குடியிருப்பு பெரும் சேதத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் 24 குடும்பங்கள் முழுதாக பாதிப்படைந்துள்ளது. இவர்கள் தற்பொழுது உறவினர்களின் வீடுகளிலேயே தங்கியுள்ளனர். மூன்றுயல குடியிருப்பில் பாரிய புளிய மரமொன்று விழுந்து குடியிருப்புக்கள் சேதமடைந்துள்ளது. தெய்வாதீனமாக வீட்டில் உள்ள மக்கள் தப்பியுள்ளனர். அடுத்து குடியிருப்பில் தென்னை மரமொன்று விழுந்து அந்த குடியிருப்பு முழுதும் பாதிப்படைந்துள்ளது. 1927ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்ட அந்த குடியிருப்புக்கள் இன்னும் கூரைத்தகடுகள் கூட மாற்றப்படாத அதே நிலையிலேயே இன்னும் காட்சியளிக்கின்றது. பல இடங்களில் வெடிப்புக்கள் காணப்படுகின்றது. எந்நேரத்திலும் அந்த குடியிருப்பு இடிந்து விழக்கூடிய அபாய நிலையில் உள்ளது. அத்தோடு பல குடியிருப்புக்களில் கூரைத்தகடும் காற்றில் அள்ளுண்டு போயுள்ளது. ஒரு வீட்டில் மின்கம்பம் உடைந்த நிலையில் இந்த மின்கம்பமும் எந்நேரத்திலும் குடியிருப்பு மீதுவிழலாம் எனும் நிலையில் உள்ளது. மின்கம்பத்தை மாற்றித்தருமாறு மின்சாரசபைக்கு அறிவித்தபோதும் இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

20180302_145604

தோட்ட நிர்வாகம்மீது குற்றம் சுமத்தும் மக்கள்

அனர்த்தம் ஏற்பட்ட இரவு தோட்ட பொது முகாமையாளருக்கு அறிவித்ததையடுத்து முகாமையாளர் வருகைத்தந்து இது தொடர்பாக எதுவும் பேசாது வெறுமனே குடியிருப்பை மட்டும் பார்வையிட்டு சென்றுள்ளார். மக்கள் தாம் இந்த சூழ்நிலையில் எங்கு இருப்பது என வினவியபோது தோட்டத்தில் வேலை செய்யும் 10 பேருக்கு மாத்திரமே வீடு ஒழுங்கு செய்வதாக சென்றுள்ளார். மேலும் அவர் மக்களின் வாழ்வாதாரத்தில் எந்தவித அக்கறையும் செலுத்தாதவராகவும், மக்கள்மீது இன பாகுபாடு காட்டுவதாகவும், தமது விரக்தியை தெரிவித்தனர். அதேவேளை இவரின் அலட்சிய போக்கினாலே இன்று தோட்டம் காடுகளாக மாறியுள்ளது என்றனர். தமது பிரச்சினையை அவர் செவிமடுக்கவும் இல்லை. தோட்டத்தில் வேலை செய்யாதவர்கள் இங்கு யாரும் கதைக்க அவசியம் இல்லை என்கின்றார் என்றனர்.

IMG_4553

தோட்டத்தில் வருமானம் குறைவாலே கூலி வேலைக்கு செல்கிறோம்

எமது மூதாதையர் காலகாலமாக இந்த தோட்டத்திற்கு உழைத்து வந்துள்ளனர். இன்று வாழ்க்கைக்கு ஏற்ற வருமானம் குறைவாக கிடைக்கின்றமையாலேயே நாம் தோட்டங்களை விட்டு வெளியே கூலி வேளைக்கு சென்றோம். 25 நாட்கள் வேலை செய்தால் 15 நாட்களே பெயர் வழங்கப்படுகின்றது. தோட்டங்களும் இன்று காடாகியுள்ளது. இன்று தோட்டத்தில் வேலையில்லை என்பதால் உதவி இல்லை என்கின்றார்கள். நாங்கள்தான் தோட்டத்தில் வேலை செய்தோம் எங்கள் பிள்ளைகளும் தோட்டத்தில் வேலைசெய்யவேண்டுமா? இதனால் நாங்கள் இன்று அநாதைகளாக்கப்பட்டுள்ளோம்.

வீடுகள் தேவையில்லை ஒரு துண்டு நிலமாவது தாருங்கள்

எமக்கு புதிய வீடுகள் அமைத்து தாருங்கள் என நாம் கேட்கவில்லை. குறைந்தது ஒரு துண்டு நிலமாவது எமக்கு சொந்தமாக தந்தால் நாம் அதில் எமக்கு இயன்றளவு ஒரு சிறிய வீடொன்றையாவது கட்டிக்கொள்வோம். ஆனால் இந்த அபாயகரமான நிலைமைகளில் நாம் வாழமுடியாது. எந்த நேரத்தில் வீடு இடிந்துவிழும், தகரம் பறக்கும், மரம் விழும் என நித்தம் பயந்து பயந்து வாழ்கின்றோம். எங்கள் பிள்ளைகளுக்கு நிம்மதியாக படிக்கக்கூட வசதியில்லை. நாங்கள்தான் இப்படி மூலிகளாக கஷ;டப்பட்டு எமது காலம் கடந்துவிட்டது எமது பிள்ளைகளாவது படித்து முன்னேறவேண்டும் என்றால் அதற்கும் வழியில்லை. இன்று பல மாணவர்கள் இங்கு வறுமை காரணமாக தமது பாடசாலை கல்வியை இடைநிறுத்தியுள்ளனர்.

‘எங்களுக்கு யாராவது உதவி செய்யுங்கள்’ கண்ணீர் மல்கும் மக்கள்

நாங்கள் தோட்டத்தில் வேலை இல்லை என்பதால் எங்களை தோட்ட நிர்வாகம் கணக்கெடுப்பதில்லை. அரசாங்கமும் எங்களை கண்டுக்கொள்ளவில்லை, இதுவரை எந்த அரசியல்வாதிகளும் எங்களின் நிலையை எட்டிப்பார்க்கவில்லை. இப்பொழுது நாங்கள் சொல்லனா துயரங்களை அநுபவிக்கின்றோம். அடுத்த மழை காற்றில் நாம் எங்கு செல்வது எனதெரியவில்லை. இப்படியே நிலைமைப் போனால் இங்கேயே செத்து மடிவதை தவிர வேறுவழி தெரியவில்லை. எங்கள் பிரச்சினைகளுக்கு யாராவது முடிவு தாருங்கள் என கண்ணீர் மல்க மன்றாடுகின்றனர்.

தமது வீட்டுக்கூரையை சரிசெய்யும் மூதாட்டி

தள்ளாடும் வயதிலும் வீட்டுக்கூரை மீது ஏறி காற்றில் அள்ளுண்ட தகரங்களை சரிசெய்யும் மூதாட்டியை நினைக்குபோது அவர்களின் துயரங்களை வார்த்தையால் அளவிடமுடியாதுள்ளது.

மலையக தலைமைகளே நூரித்தோட்டத்தை பார்வையிடுங்கள்

இவ்வாறு சொல்லனா துயரத்தை அநுபவிக்கும் தோட்ட மக்களுக்கு அவர்களின் வாழ்வாதார மே;பாட்டுக்கு மலையக தலைமைகள் நேரடியாக அங்கு சென்று அவர்களின் பிரச்சினைகளை கண்ணுற்று, செவிமடுத்து அதற்கு தீர்வுபெற்றுக்கொடுக்கப்படவேண்டும். அனர்த்தம் நிகழ்ந்து உயிர்பலிபோனபின் ஊடகங்களில் அதையும், இதையும் செய்வதாக அறிக்கை விடுவதில் அர்த்தம் இல்லை.

(அவிசாவளை நிருபர்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here