”இலங்கையில் பெருந்தோட்டத்துறையில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு இந்த நிறுவனம் மிகவும் முக்கியமானதாகும்எனவும் இங்கு நல்ல கல்வி வழங்குவதற்கான சூழல் உள்ளது. நாட்டின் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான பட்டத்தை வழங்க முடியும் எனவும் விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அதுருகிரிய தேசிய தோட்ட முகாமைத்துவ நிறுவனத்தின் புதிய கல்வி மற்றும் நிர்வாக கட்டிடத்தை இன்று (14) திறந்து வைத்து உரையாற்றும்போதே அமைச்சர் மஹிந்த அமரவீர இதனை தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்ட கைத்தொழில் தொடர்பான கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்தும் வகையில் பல்கலைக்கழகமாக இந்த நிறுவனம் மாற்றப்படவுள்ளது. இது தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேசிய தோட்ட முகாமைத்துவ நிறுவகத்தை சகல வசதிகளுடனும் கூடிய பல்கலைக்கழகமாக அபிவிருத்தி செய்ய எதிர்பார்க்கப்படுகிறதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நெருக்கடியான காலத்தில் ஜனாதிபதி நாட்டைப் பொறுப்பேற்றுக்கொண்டார். போராட்டம் நடந்த நேரத்தில், பிரதமர் இல்லாமல் ஒரு வாரம் கடந்தது. அப்போது நாட்டை பொறுப்பேற்க எந்த தலைவரும் இருக்கவில்லை. ஜனாதிபதி ரணில் விகிரமசிங்க நாட்டைக் பொறுப்பேற்று, விவசாயிகளை மீண்டும் விவசாய நிலங்களுக்கு அனுப்புவதற்குத் தேவையான உரங்களை வழங்கியிருக்கிறார். நாட்டிற்கு தேவையான எரிபொருளை கொண்டு வருவதற்கான பணிகளும் முன்னெடுக்கப்பட்டன.
அதனாலேயே கடந்த இரண்டு போகங்களில் நாட்டுக்குத் தேவையான அரிசியை விவசாயிகள் உற்பத்தி செய்தனர். தற்போது தேயிலை தொழில்துறையும் வழமைக்கு திரும்பியுள்ளது. காலநிலை தாக்கம் இல்லாவிட்டால் தேயிலை உற்பத்தியில் சாதனையை பதிவு செய்ய முடியும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இன்று நாட்டின் பொருளாதாரம் நிலைத் தன்மையை அடைந்து வருகிறது. ஜனாதிபதி நாட்டில் இந்த நிலையை ஏற்படுத்தியுள்ளார். அந்த வேலைத் திட்டத்தை சீர்குலைக்காவிட்டால் அடுத்த சில வருடங்களில் மீண்டும் வீழ்ச்சியடையாத பொருளாதாரம் இந்த நாட்டில் கட்டியெழுப்பப்படும் என்பது உறுதி” என்று தெரிவித்தார்.