பசுவதையை நிறுத்துவோம்; அதற்கு முன் மனித வதையை நிறுத்துவோம். – அமைச்சர் மனோ!

0
112

இலங்கையில் பசுவதையை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலனை செய்வோம். இங்கே உரையாற்றிய பிரம்ம குமாரிகள் அமைப்பை சார்ந்த கலாநிதி மலர்செல்வி மகேசன் அம்மையார், அனைத்து மிருக வதைகளையும் நிறுத்துவோம் என்று கூறினார். இது மிகவும் நல்லது. மனிதனும் ஒரு மிருகம்தான். மிருக பட்டியலில், முதலாவது மிருகம் மனிதர்தான். ஆகவே பசுவதையை போல, மனித வதையையும் முற்று முழுதாக இந்நாட்டில் நிறுத்துவோம். மனித வதையை கண்டும் காணாதது போல் இருந்துவிட்டு, பசு வதையை நிறுத்துவோம் என்று மாத்திரம் சொல்வது முறையானது அல்ல என ஜனநாயக மக்கள் முன்னணி – தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.

பசுவதையை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த நிகழ்வை, சுவாமி மகா கர்ததாஸ் ஏற்பாட்டில் கொழும்பு புது செட்டி தெரு, சர்வதேச கிருஷ்ண பக்தி கழகம், கொழும்பு ஹவ்லக் வீதி பெளத்த சுவர்ண ஜயந்தி மண்டபத்தில் நடத்தியது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் மனோ கணேசன், சிறப்பு அதிதிகளாக பக்தவேதாந்தா சுவாமி பிரபு பாத, அதுரலியே ரத்தன தேரர் எம்பி, வெள்ளவத்தை விகராதிபதி சுகதானந்தா தேரர் ஆகியோர் கலந்துக்கொண்டனர். இங்கு மூன்று மொழிகளிலும் உரையாற்றிய அமைச்சர் மனோ மேலும் கூறியதாவது,

பசுவதையை நிறுத்துவதன் மூலமாக கிடக்கப்பெறும் நன்மைகளை பற்றி இங்கு பேசப்பட்டது. அவற்றை நான் கவனமாக கேட்டேன். அவற்றில் பல உண்மைகள் பொதிந்து உள்ளன. இது தொடர்பான தேசிய கருத்தொருமைப்பாடு ஏற்பட வேண்டும். அதற்கு சர்வதேச கிருஷ்ண பக்தி கழகம் எடுக்கும், முயற்சிகளுக்கு எனது ஒத்துழைப்பு கிடைக்கும். முடியாது, இல்லை என்று என்னால் நிராகரிக்க முடியாத ஒரு அமைப்புதான், கொழும்பு சர்வதேச கிருஷ்ண பக்தி கழகம் ஆகும். உண்மையில் இந்த நிறுவனத்தின் சுவீகார புத்திரன் என என்னை நான் நினைக்கிறேன்.

இங்கு அதுரலியே ரத்தன தேரர் எம்பி உரையாடினார். எனக்கு மிகவும் நெருங்கிய வெள்ளவத்தை விகராதிபதி சுகதானந்தா தேரரும் இங்கே உரை நிகழ்த்தினார். பசுவதை பற்றி இங்கே குறிப்பிட்டார்கள். அவர்களுடன் நான் உடன்படுகிறேன். விகராதிபதி சுகதானந்தா தேரர், என்னை பாராளுமன்றத்தில் அச்சமின்றி பேசும்படி அறிவுரை வழங்கினார். அவரது அறிவுரைக்கு நன்றி. நான் எப்போதும் அச்சமின்றியே பாராளுமன்றத்திலும், இங்கே வெளியிலும் உரையாற்றி செயற்படுகிறேன் என்பதை அவருக்கு நான் அறிய தருகிறேன். அவருக்கு என்னைப்பற்றி தெரியாமல் இல்லை. உள்ளதை உள்ளபடியே நான் பேசுகிறேன். நீதிக்கும், என் மனசாட்சிக்கும் தவிர எவருக்கும் நான் அஞ்சேன்.

மிருக பட்டியலில் இருக்கின்ற முதலாவது மிருகம் மனிதர்தான். ஆகவே பசுவதையை போல, மனித வதையையும் முற்றுமுழுதாக இந்நாட்டில் நிறுத்துவோம். மனித வதையை கண்டும் காணாதது போல் இருந்துவிட்டு பசு வதையை நிறுத்துவோம் என்று மாத்திரம் சொல்வது முறையானது அல்ல. மனித வதையை அடையாளம் கண்டு நிறுத்துவோம். பசு வதையையும் நிறுத்துவோம். அனைத்து மிருக வதைகளையும் நிறுத்துவோம். அதற்கு நான் தயார்.

உண்மையில் இந்துத்துவம்தான், பௌத்தத்துக்கும் மூலம் ஆகும். அனைத்தும் இந்தியாவில் இருந்து இங்கே வந்ததாக இப்போது பேசிய சுகதானந்தா தேரர் அவர்களே சொன்னார். ஆம், புத்தர் இங்கே வந்து போனதாக ஒரு கருத்து உள்ளது. அவரும் இந்தியாவில் இருந்துதான் இங்கே வந்து இருப்பார். பௌத்த மதம், சங்கமித்தை பிக்குனி, மகிந்த தேரர், அரச மரக்கிளை, புனித தந்தம், கலை, கலாச்சாரம், மொழி, பண்பாடு, மக்கள் இனங்கள் எல்லாமே இந்தியாவில் இருந்துதான் இங்கே வந்தன. வெவ்வேறு காலகட்டங்களில் இங்கே வந்தன. இதை புரிந்துக்கொண்டால், இந்நாடு தனி ஒரு பிரிவினருக்கு மாத்திரமே சொந்தம் என்ற சிந்தனை எவ்வளவு பிழையானது என்பது புரியும்.

அதுபோல் இந்நாட்டில் இந்துக்களும், பெளத்தர்களும் ஒன்று சேருவது மிகவும் மகிழ்ச்சிக்குரியது. அதற்கு நான் முழுமையாக எனது ஆதரவை பதிவு செய்கிறேன். ஆனால், அது இந்நாட்டில் வாழும் ஏனைய இன, மதங்களுக்கு எதிரான கூட்டாக இருக்க முடியாது. அத்தகைய குரோத சிந்தனையை இந்துத்துவமும், பௌத்தமும் போதிக்கவில்லை. எல்லோரையும் அரவணைக்கவே எமது மதங்கள் போதிக்கின்றன. இதை நாம் மனதில் கொள்ள வேண்டும். இதுவே நமது அரசாங்கத்தின் கொள்கையாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here