மலையக இளைஞர்கள் இன்று பெருந்தோட்டப் புறங்களில் ஒரு கணக்காய்வின்படி 60 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் தொழிலின்றியும், தமது வாழ்க்கையில் விரக்தியுற்ற நிலையிலும் காணப்படுகின்றார்கள். இவர்களின் இந்த அவல நிலைக்கு காரணமானவர்கள் தோட்ட நிர்வாகங்கள் தான் என இ.தொ.கா உப தலைவரும், சிரேஷ்ட தொழில் உறவுகள் இயக்குனருமான எம்.வேங்குருசாமி தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் சௌமிய பவனில் நடைபெற்ற தோட்டத் தலைவர்கள், தலைவிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது:-
இலங்கை முழுவதிலும் 500க்கு மேற்பட்ட பெருந்தோட்டங்களை நாம் பார்க்கின்றோம். இவற்றில் படித்துவிட்டு தொழிலின்றி சுமார் 60 ஆயிரம் இளைஞர்களும் யுவதிகளும் ஒரு நிரந்தரமான தொழிலின்றி, கொழும்பு போன்ற புறநகர்களிலும் குறைந்த வருமானத்திற்கு தொழில் புரிந்து வருகின்றார்கள்.
இவர்களது பாதுகாப்பிலும், உரிமைகளிலும், சலுகைகளிலும்; கவனிப்பாரற்ற நிலையிலும் அநாதைகளாக இருப்பதையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. தேனீர் கடைகளிலும், சில்லறை கடைகளிலும் கிடைப்பது மிகவும் குறைந்த ஊதியமே.
பெண்களைப் பொறுத்த வரையில் தமது பெற்றோர்களின் பாதுகாப்பில் இருக்கக் கூடியவர்கள். இவர்கள் பங்களாக்களிலும், தனியர் வீடுகளிலும் வேலைக்காரிகளாக அமர்த்தப்பட்டு எஜமானார்களால் தகாத உறவுகளுக்கு இரையாக்கப்படுகின்றார்கள். இவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாக்கப்படுகின்றது. இத்தகையதோர் நிலைமைக்கு ஆளாக்கப்படுவதற்கு துணை போகின்றவர்கள் தோட்ட நிர்வாகங்களே. தோட்டக் கம்பனிகள் தோட்டங்களிலேயே இளைஞர்களது தகுதிக்கேற்ப தொழில் வழங்க முடியும். அப்படி தொழில் வழங்கப்பட்டிருந்தால் இவர்களது நிலை கேள்விக் குறியாக அமைந்திருக்காது. இன்னும் பத்து ஆண்டுகளின் முன்னரோ, பின்னரோ தோட்டங்களை மூடும் நிலை உருவாகியுள்ளது. அவ்வாறு தோற்றுவித்தால் நிலைமை என்னவாகும்?
தற்போதைய சூழ்நிலையில் தோட்டங்கள் அபாயகரமான சூழ்நிலையைத்தாண்டி வருகின்றது.எங்கு பார்த்தாலும் மண் சரிவுகளும், கட்டிட இடிபாடுகளும் நிகழ்ந்த வண்ணம் உள்ளது.
ஆகவே, தோட்டங்களை சொற்ப காலத்திற்காவது பராமரித்துக் கொள்ள உந்து சக்தியாக இளைஞர்களும், யுவதிகளும் இருந்திருப்பார்கள். இன்றைய சூழ்நிலையில் 60 ஆயிரத்திற்கு மேற்பட்ட இளைஞர்களும், யுவதிளும் தொழிலின்றி அவதிப்படுவதை எம்மால் சகித்து கொண்டு இருக்க முடியாது. நாளைய மலையகத்தை ஆளக்கூடியவர்கள் இளைஞர்களே. அவர்களது வாஞ்சைகளிலும், விருப்பங்களிலும், அபிலாசைகளிலும் நாம் என்றும் அவர்களுடனேயே கரம் கோர்ப்போம்.
தோட்டக் கம்பனிகளோடு பேச்சு வார்த்தை நடாத்தி அவர்களின் தகுதிகளுக்கேற்ற தொழிலைப் பெற்றுக் கொடுக்க வலியுறுத்துவோம் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.
எஸ்.தேவதாஸ்
ஊடக இணைப்பாளர்
இதொகா