பதுளை தமிழ் மகளிர் பாடசாலை அதிபரை மண்டியிட வைத்தமைக்கு; அமைச்சர் இராதா கண்டனம்!

0
177

கல்வியை சமூகத்திற்கு வழங்கும் உத்தமமான பணியில் ஈடுபடும் அதிபர் ஆசிரியர்களுக்கு இடையூறு விளைவிக்கும் விதத்தில் செயற்படும் அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் கல்விச்சமூகத்திற்கே அபகீர்த்தியை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்துவிடுகின்றது. இவ்வாறு செயல்படும் அரசியல்வாதிகளின் நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கது. என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்
பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய அதிபர் திருமதி ஆர்.பவானி அரசியல்வாதி ஒருவரால் மண்டியிட வைக்கப்பட்டார் என்ற சம்பவம் நாட்டில் கல்விச்சமூகத்தின் மத்தியில் தற்போது பாரிய உணர்வலைகளை ஏற்படுத்திவருகின்றது.
பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய அதிபர் அரசியல்வாதி ஒருவரால் மண்டியிடவைக்கப்பட்டார் என்ற சம்பவம் கடந்த வாரத்திலிருந்து வெளியாகியது. எனினும் தற்போது ஊடகங்கள் வாயிலாக இப்பிரச்சினையின் தாக்கத்தை நாட்டு மக்கள் அனைவரும் அறியக்கூடியதாகவுள்ளது.

இவ்விடயம் கடந்த காலங்களில் எமது கவனத்தின் கீழ் கொண்டுவரப்படவில்லை. தற்போது எனது கவனத்தின் கீழ் இவ்விடயம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து உடனடியாக ஆராயவுள்ளோம். இப்பாடசாலையின் அதிபர் கடந்த காலத்தில் இந்த பாடசாலையை மத்திய அரசிலிருந்து விஞ்ஞான கல்லூரியாக மாற்றுவதற்கு முனைப்போடு ஆர்வம் செலுத்தி வந்தார். அத்துடன் பாடசாலையின் கடந்த கால பெறுபேறுகள் சிறந்த முறையில் பெறப்பட்டுள்ளமையை அறியக்கூடியதாகவுள்ளது.

இந்நிலையில் இவருக்கு நடந்துள்ளதாக கூறப்படும் சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதுடன் கல்விச்செயற்பாடுகளில் ஈடுபடுவார் மீது அபகீர்த்தியை ஏற்படுத்தும் விதத்தில் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் நிறுத்தப்படவேண்டும். கல்விச்சமூகம் எவ்வித அரசியல் தலையீடுகளுமின்றி சுயாதீனமாக செயற்படுவதனையே நாம் விரும்புகின்றோம் என்றார்.
கொட்டகலை நிருபர் தி.தவராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here