ஊவா மாகாண முதலமைச்சரால் மண்டியிட வைக்கப்பட்ட பாடசாலை அதிபர் உளநல மருத்துவர் ஒருவரின் ஆய்விற்கு உட்படுத்தப்படவுள்ளார்.
பதுளை மருத்துவமனையின் சட்ட மருத்துவ அதிகாரியின் ஆலோசனைக்கமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முதலமைச்சரால் மண்டியிட வைக்கப்பட்டமையினால், பாடசாலை அதிபர் உளவியல் ரீதியிலான தாக்கத்துக்கு உட்பட்டுள்ளமை குறித்து ஆய்வுசெய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படும் முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்று நேற்றைய தினம் காவல்துறையினர் விசாரணைகளை நடத்தியுள்ளனர்.
காலை எட்டு மணி முதல் சுமார் 3 மணித்தியாலங்கள் தாம் முகம் கொடுக்க நேர்ந்த நிகழ்வுகள் குறித்து பாடசாலை அதிபர் காவல்துறையினருக்கு வாக்குமூலம் பதிவுசெய்துள்ளார்.
இதேவேளை, அதிபர் மண்டியிட வைக்கப்பட்ட சம்பவத்துக்கு முதலமைச்சர் பதவியில் இருந்து சாமர சம்பத் தசநாயக்க பதவி விலக வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் வலியுறுத்தினார்.
இதேவேளை, பள்ளேகடுவ நிவ்பர் தோட்ட மக்கள் பதுளை மகளீர் மகா வித்தியாலய அதிபரை ஊவாமாகாண முதலமைச்சர் மண்டியிட வைத்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுப்பட்டனர்.
அதிபரை அவமானப்படுத்தியமைக்கு ஊவாமாகாண முதலமைச்சரை பதவி விலகுமாறு இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.<