பதுளை – ரொக்கில் ஸ்ரீ காளியம்மன் தேவஸ்தானத்துக்கு, நேர்த்தி ஒப்படைப்புக்காக ஆடு, மாடு, கோழிகள் போன்ற உயிரினங்களை வழங்க வேண்டாமென்று, மேற்படி தேவஸ்தான அறங்காவலர் சபையினர் அடியார்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ரொக்கில் ஸ்ரீ காளியம்மன் தேவஸ்தான அறங்காவலர் சபைத்தலைவர் சிவநெறிச்செல்வர் க. ஜெயநாயகம் தலைமையில், நேற்று (03) மாலை, அறங்காவலர் சபைக் கூட்டம் நடைபெற்றபோது, மேற்கண்ட உயிரினங்கள் நேர்த்திக்கு ஒப்படைக்கக்கூடாதென்ற ஏகமானதான முடிவு எடுக்கப்பட்டது. அம்முடிவின் பிரகாரம் விடுக்கப்பட்ட அவ்வேண்டுகோளில், ‘எமது தேவஸ்தானத்துக்கு பெருமளவிலான அடியார்கள் வந்து, அம்பாளை வணங்கி, இஸ்ட சித்திகளைப் பெற்றுச் செல்கின்றனர்.
இவ்வடியார்களில் பலர், தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை, ஸ்ரீ காளியம்மனிடம் முன்வைத்து நேர்த்திவைத்து வணங்குகின்றனர். இப்பிரச்சினைகள் நிவர்த்தியானதும், ஆடு, மாடு, கோழிகள் போன்ற உயிரினங்களை நேர்த்தி ஒப்படைப்பாக, அடியார்கள் வழங்கி வருகின்றனர்.
தேவஸ்தானத்துக்கு நேர்த்திக்காக ஒப்படைக்கப்படும் உயிரினங்கள், தவறான செயல்பாடுகளுக்கு பயன்படுத்தபடுவதனாலும் தேவஸ்தானத்தினால் முறையாக பராமரிக்கவும் முடியாமலுள்ளதாலும், அடியார்கள் இதனை புரிந்துகொள்வதோடு, ஏற்படும் அசௌகரியங்களுக்கும் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்.
ஆகையினால், அந்த உயிரினங்களுக்கு பதிலாக, பணத்தை, தேவஸ்தான உண்டியலில் போடலாம் அல்லது தேவஸ்தான அலுவலகத்தில் உயிரினங்களை வழங்குவதற்கான பணத்தை செலுத்தி, ரசீதைப் பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகும்’ என்றும் குறிப்பிட்டுள்ளது.
எம். செல்வராஜா.