சர்ச்சைக்குரிய பனாமா, மொஸெக் பொன்சேகா நிறுவனத்தில் இரகசிய கணக்குகளை வைத்திருக்கும் சிலரை பாதுகாக்கும் முயற்சியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டிலிருந்து வெளிநாட்டிற்கு பணத்தை கொண்டு செல்வதில் காணப்படும் நிபந்தனைகளை, இந்த ஆண்டுக்குள் நீக்கவுள்ளதாக பிரதமர் அறிவித்துள்ளார்.
இது வரை காலமும் எந்த ஒரு அரசாங்கமும் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான முயற்சிக்களை முன்னெடுத்தததில்லை.
நாட்டிற்குள் வரும் பணத்தை பார்க்கிலும், வெளிச்செல்லும் பணமே அதிகமாக காணப்படுகிறது. இவ்வாறான நிலையில் பிரதமரின் அறிவிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டால் வகை தொகையின்றி பணம் வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்ல நேரிடும்.
எமது நாட்டை பாரிய வங்குரோத்து நிலைக்கு கொண்டு செல்லும் பிரதமரின் இந்த அறிவிப்பு, பனாமா மோசடியுடன் தொடர்புடையதாகவே நாம் நோக்க வேண்டியுள்ளது.
இதேவேளை, எமது நாட்டின் பணத்தை பாரியளவில் கொள்ளையிட்டு வெளிநாடுகளுக்கு கொண்டுசென்ற கொள்ளையர்களின் பெயர்கள் தற்போது வெளியிடப்பட்டுள்தாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.