பலர் எதை சொன்னாலும் எந்த கட்சியிலும் நான் இணையப்போவதில்லை என இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொது செயலாளர் எஸ்.சதாசிவம் தெரிவித்தார்.இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் எதிர்கால அரசியல் திட்டங்கள் தொடர்பாக தெளிவுப்படுத்தம் கூட்டம் ஒன்று 03.06.2018 அன்று நுவரெலியா கூட்டுறவு விடுதியில் இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்று பலர் பொய்யான பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். நான் ஏனைய கட்சிகளில் இணையப்போவதாக தெரிவிக்கும் கருத்துகள் பொய்யான கூற்றாகும். இன்று மலையகத்தில் அரசியல் கட்சிகள் தொழிற்சங்கள் என்னை இணைத்துக்கொள்ளுமாறு அழைத்தாலும், இதுவரை நான் எந்த முடிவும் எடுக்கவில்லை. எந்த கட்சியிலும் சேரக்கூடிய எண்ணம் இப்போதைக்கு இல்லை. அதற்கான வாய்ப்பும் இல்லை.
இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி, தொழிலாளர் நலன் கருதி தனித்து நின்று செயற்படவுள்ளது. தனித்து நின்று மலையக அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதே எனது தீர்மானமாக உள்ளது.
இலாபத்திற்கேற்ப பலர் ஏனைய கட்சிகளுடன் இணைந்தாலும், நான் எனது கட்சியின் கொள்கைகளை விட்டுக்கொடுத்ததில்லை.
இன்று அரசாங்கத்தோடு ஒட்டி இருக்கின்ற கட்சிகளும், வெளியில் இருந்து பேசிக்கொண்டிருக்கின்ற மலையக தொழிற்சங்கங்களும் மக்களுடைய நலன் கருதி செயற்பட்டதாக தெரியவில்லை.
இன்று மலையகத்தில் முன்னெடுக்கப்படும் வீடமைப்பு திட்டமும், சம்பள உயர்வு பேச்சுவார்த்தையும் கூட அவர்களுடைய கட்சியின் நகர்வுக்காகவும், அவர்களின் தலைமைத்துவத்தை தக்க வைத்துக்கொள்வதற்கு மாத்திரமே பயன்படுத்துகின்றனர்.
எமது கட்சி, மக்களை ஏமாற்றி பிழைத்ததாக யாராலும் கூற முடியாத அளவிற்கு எங்களுடைய கட்சி செயல்பட்டு வருகின்றது. இதற்கு சேர் பூசும் வகையில் சிலர் தான் கட்சி தாவுவதாக சொல்வது அப்பட்டமான பொய் பிரச்சாரமாகும் என அவர் இதன்போது தெரிவித்தார்.
(க.கிஷாந்தன்)