எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு, அத்தோடு பல்வேறு இடங்களில் வீதியை மறித்து போராட்டம் இடம்பெறுவதால் அட்டனில் இருந்து தூர பிரதேசங்களுக்கு செல்லும் சில பஸ் போக்குவரத்து சேவைகள் இன்று (19.04.2022) இடம்பெறவில்லை. இதனால் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்குள்ளாகினர். எனவே உடனடியாக இதற்கு தீர்வை பெற்றுத் தரக் கோரி, அட்டன் போராட்டமொன்று நடத்தப்பட்டு வருகின்றது.
அட்டன் பிரதான பஸ் தரிப்பிடத்திற்கு அண்மித்த வளாகத்தில் பொது மக்கள் மற்றும் பயணிகள் இந்த போராட்டத்தை 19.04.2022 அன்று காலை முதல் நடத்தி வருகின்றனர்.
அரசாங்கத்தினால் நாளுக்கு நாள் எரிபொருளின் விலை தன்னிச்சையாக அதிகரிக்கப்படுவதாகவும், அவ்வாறு எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டாலும், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு காணப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அரசாங்கத்தை விட்டு வெளியே செல்ல வேண்டும், கோட்டா கோ ஹோம், கோட்டா பைத்தியம் என்ற பதாதைகளை எந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதேவேளை, பிரதான பஸ் மார்க்கத்தை மறித்து நடத்தப்படும் போராட்டம் காரணமாக, கொழும்பு, கண்டி, நுவரெலியா, பொகவந்தலாவ, மஸ்கெலியா உள்ளிட்ட தூர பிரதேசங்களுக்கு செல்வதற்கு வருகைத் தந்த பயணிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
க.கிஷாந்தன்