தனது நண்பர்களுடன் சேர்ந்து ஊஞ்சல் சவாரி செய்த 14 வயது மாணவன் தரையில் விழுந்து உயிரிழந்துள்ளதாக மொரட்டுமுல்ல காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.மொரட்டுவ பஹல இந்திபெத்த பிரதேசத்தில் உள்ள மொரட்டுமுல்ல வில்லோரவத்தை ஞானிஸ்ஸர பௌத்த கல்லூரியில் ஒன்பதாம் ஆண்டில் கல்வி கற்கும் சமோத் துலஞ்சய விஜேசேகர என்ற மாணவனே துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.
கல்லுாரி ஓரத்தில் இரும்பு மற்றும் தட்டுகளால் ஆன ஊஞ்சலில் ஐந்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஏறி ஊஞ்சல் ஆடியதால் இந்த அசம்பாவிதம் நடந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஊஞ்சலில் நின்றிருந்த குறித்த மாணவன், ஊஞ்சலை அதிவேகமாக ஆடும்போது, ஊஞ்சல் அருகே விழுந்துள்ளான்.அதேநேரம் ஊஞ்சலை உயர்த்திவிட்டு திரும்பி வரும்போது, இரும்புத் தகட்டின் கீழ் பகுதி மோதியதில் மாணவனின் தலை மற்றும் உடல் தரையில் அழுத்தப்பட்டது.
மாணவனின் மூக்கிலிருந்தும் வாயிலிருந்தும் அதிகளவு இரத்தம் வெளியேறியதாகவும், அதேநேரம் மொரட்டுவ லுணாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிறிது நேரத்திலேயே மாணவன் உயிரிழந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
மாணவனின் மரணம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தப்பட உள்ளது. மொரட்டுமுல்ல காவல் நிலைய பரிசோதகர் தினேஷ் சந்திரசிறியின் பணிப்புரையின் பேரில் காவல்துறை கான்ஸ்டபிள் 60685 நிஷாந்த விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.