நாளை முதல் மாணவர்களை வழமையான முறையில் பாடசாலைகளுக்கு அழைப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பில் சகல கல்வி அதிகாரிகளுக்கும், கல்வி அமைச்சின் செயலாளர் கபில சி பெரேராவினால் இதற்கான சுற்றுநிருபம் அனுப்பப்பட்டுள்ளது.
நாட்டின் நிலையினை கருத்திற்கொண்டு மாணவர்கள் இதுவரை குழுக்களாக பாடசாலைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
இதன்படி, 20 மாணவர்களை உள்ளடக்கிய வகுப்புகள் தினமும் நடத்தப்பட்டதுடன், 21 முதல் 40 வரையில் மாணவர்கள் எண்ணிக்கையை கொண்ட வகுப்புகள் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, வெவ்வேறு வாரங்களில் தனித்தனியாக அழைக்கப்பட்டிருந்தனர்.
அத்துடன், 40 மாணவர்களுக்கு மேல் உள்ள வகுப்புகள் 3 சம பிரிவுகளாக பிரித்து கற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், நாளை முதல் சகல மாணவர்களையும் வழமையான முறையில் பாடசாலைகளுக்கு அழைப்பதற்கு அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.