பாடசாலை மாணவர் ஒருவருக்கு இலங்கை போக்குவரத்து அதிகார சபை தண்டப்பணம் அறவிட்டமை பிழையான ஒரு செயற்பாடாகும்.
ஹட்டன் இலங்கை போக்குவரத்து சபையினர் சிறுபான்மை மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தொடர்ச்சியாக இடையூறு விலைவிக்கின்றமை தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
அம்பேகமுவ பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று (17.06.2018) அம்பேகமுவ பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.இதற்கான ஏற்பாடுகளை பிரதேச செயலாளர் ஆர்.டி.பி.சுமனசேகர மேற்கொண்டிருந்தார்.
இந்த கூட்டத்தில் இணைத்தலைவர்களான கல்வி இராஜாங்க அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான மயில்வாகனம் திலகராஜ் கே.கே.பியதாச மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கணகராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.இவர்களுடன் மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் பிலிப்குமார் ஹட்டன் டிக்கோயா நகர சபை தலைவர் உட்பட அரச திணைக்களங்களின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த கல்வி இராஜாங்க அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன்
பாடசாலை மாணவர்களுக்கு இலங்கை போக்குவரத்து சபையின் மூலமாக வழங்கப்படுகின்ற மாதாந்த அனுமதி பத்திரத்தை ஞாயிற்றுகிழமைகளில் பயன்படுத்தியமைக்காக பாடசாலை மாணவர் ஒருவருக்கு 490 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளமை பிழையான ஒரு செயற்பாடாகும்.
ஹட்டன் பகுதியில் செயற்படுகின்ற இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளின் போட்டி தன்மை காரணமாக மாணவர்களும் ஆசிரியர்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள்.இவர்கள் போட்டி போட்டுக் கொண்டு பிரயாணங்களை முன்னெடுப்பதால் பாடசாலை மாணவர்களையும் ஆசிரியர்களையும் இவர்கள் பேருந்துகளில் ஏற்றுவதில்லை.அது மட்டுமல்லாமல் மழை காலங்களில் மாணவர்கள் நனைந்திருக்கின்றார்கள் என்ற காரணத்தினாலும் அவர்களை ஏற்றிக் கொள்வதில்லை.இவை அனைத்தும் பிழையான செயற்பாடுகள் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
மேலும் இந்த விடயம் தொடர்பாக பொலிசார் ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.இந்த செயற்பாடானது எங்களுடைய சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு மாத்திரமே நடைபெறுகின்றது.இந்த நிலைமை தொடருமானால் இவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலைமை ஏற்படும் எனவும் குறிப்பிட்டார்.
இங்கு கருத்து தெரிவித்த நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ்
ஒரு சில அரச பேருந்துகளில் எங்களுடைய சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த தமிழ் மாணவர்களை பேருந்துகளில் ஏற்றிக் கொண்டு சென்றாலும் ஆசனம் இருந்தாலும் அவற்றில் அமர வேண்டாம் என பேருந்து நடத்துனர்கள் தடுப்பதாகவும் எமக்கு பெற்றோர்கள் புகார் தெரிவித்திருக்கின்றார்கள்.இது தொடர்பாக நான் ஆராய்ந்து பார்த்ததில் உண்மை என்பது தெரியவந்துள்ளது.இது மாணவர்களை அவமதிப்பதுடன் சிறுவர் உரிமை மிரலாகவும் கருதப்படும் எனவே இந்த நிலை தொடருமானால் குறித்த பேருந்து ஒட்டுனர்களுக்கும் நடத்துனருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய ஒரு நிலைமை ஏற்படும்.
இங்கு கருத்து தெரிவித்த இணைத்தலைவர்களில் ஒருவரான மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கணகராஜ்
இங்கு இரண்டு மாதத்திற்கு ஒரு முறை நடக்கின்ற பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு உரிய அதிகாரிகள் வருவதில்லை அல்லது ஒரு சில அதிகாரிகள் தொடர்ச்சியாக வருவதில்லை.ஒவ்வொரு கூட்டத்திற்கு ஒவ்வொருவர் வருகை தருகின்ற காரணத்தால் அந்த அதிகாரிகள் நாங்கள் இங்கு சுட்டிக்காட்டுகின்ற தவறுகளை திருத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதில்லை.எனவே அதிகாரிகள் தொடர்ச்சியாக இந்த கூட்டங்களில் கலந்து கொண்டால் மாத்திரமே இ ங்கு சுட்டிக்காட்டப்படுகின்ற பிழைகளை திருத்தி அமைக்க முடியும்.மக்களுக்கு உரிய சேவையை வழங்க முடியும்.
(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)