பாதுக்கை மில்லேவ தோட்டத்தில் தொழிற்பேட்டை; அதற்கு எதிராக இதொகா போர்க்கொடி!

0
126

பாதுக்கை மில்லேவ தோட்டத்தை அரசாங்கம் சுவீகரித்து தொழில்பேட்டை அமைப்பதால் தொழிலாளர்களுடைய வாழ்வாதாரம் இழப்பதையிட்டு
இ.தொ.கா கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளது.

பேச்சு வார்த்தை மூலம் பிரச்சினையை சுமூகமாகத் தீர்க்க
தொழில் ஆணையாளருக்கு சட்டத்தரணி கா.மாரிமுத்து அவசரக் கடிதம்.

கொட்டகலை பிளாண்டேசனுக்கு உரித்தான பாதுக்கை, மில்லேவ தோட்டத்தை அரசாங்கம் சுவிகரித்து, அதில் தொழில் பேட்டை அமைப்பதற்கு எடுத்துக் கொண்ட முயற்சியால் தொழிலாளர்களுடைய வாழ்வாதாரம் இழப்பதை வன்மையாகக் கண்டிப்பதாக இ.தொ.கா நிர்வாக உப தலைவரும், சட்டத்தரணியுமான கா.மாரிமுத்து தொவித்துள்ளார்.

இது தொடர்பில் இ.தொ.கா பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், இ.தொ.கா தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம் ஆகியோரின் பரிந்துரைக்கேற்ப சட்டத்தரணி கா.மாரிமுத்து தொழில் ஆணையாளர் விமல வீராவுக்கு எழுதிய அவசரக் கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

மூன்று, நான்கு தலைமுறையாக இத்தோட்டத்தில் வாழ்ந்துவரும் இம்மக்களுக்கு தெரியாது. முன்னறிவித்தலின்றி தீடீரென அரசாங்கம் நகர அபிவிருத்தி சபையின் ஊடாக இத்தோட்ட காணியை சுவீகரித்து தொழில் பேட்டை அமைக்க திட்டமிட்டுள்ளது. 76 குடும்பங்களில் 269 பேர் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களில் 148 பேர் தோட்டத்தில் தொழில் புரிந்து வருகின்றார்கள். 66 குடியிருப்புக்கள் உள்ளன. சேவையாளர்கள் விடுதிகள், பிரட்டுக் களங்கள், பிள்ளை மடுவடுவங்கள், வைத்தியசாலை, பாடசாலைகென இரண்டு கட்டிடங்கள், பாடசாலை ஆசிரியர் விடுதிகள், பாடசாலை செல்லும் மாணவர்கள் 52மூ அடங்கலாக 93 வெளியாட்களும் இங்கு வசித்து வருகின்றார்கள்.

இவ்வாறான நிலைமைகளில் 393.65 நிலப்பரப்பை கொண்ட இத்தோட்டத்தில் 318.07 ஹெக்டர் காணியில் தொழில் பேட்டை அமைப்பதற்கு எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாது. தொழில் திணைக்களத்தையோ தொழிற்சங்கங்களையோ இது பற்றி கலந்து ஆலோசிக்காது அரசாங்கம் எடுத்துக் கொண்ட தன்னிச்சையான முடிவு விபரிதாமானது. அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் தொழிலாளர்கள் வேலையிழப்பதை அனுமதிக்க முடியாது.

எனவே இவ்விடயம் பற்றி தொழில் ஆணையாளரின் தலைமையில் அவசர பேச்சு வார்த்தை ஒன்றின் மூலம் பிரச்சினைக்கு தீர்வுகாண வழிசமைக்க உடன் ஆவண செய்ய வேண்டு எனவும் சட்டத்தரணி கா.மாரிமுத்து தெரிவித்துள்ளார்.

இதற்கான விபரங்களைத் திரட்டும் பணியில் இ.தொ.கா உப தலைவரும், சிரேஷ்ட் தொழிலுறவு இயக்குனருமான எம்.வேங்குருசாமி, அவிசாசலை இ.தொ.கா பிராந்திய இயக்குனர் எம்.செல்வராஜா ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ். தேவதாஸ்
ஊடக இணைப்பாளர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here