பாரபட்சமான முறையிலே அரச ஆணையை முன்னெடுக்கும் அரசினைக் கண்டிப்பதும் தூய்மையான அரசியலே

0
103

தூய்மையான அரசியலை முன்னெடுக்க வேண்டும் என அரசியல்வாதிகளை நோக்கிப் பேசும் அளவுக்கு தூய்மையான அரசாட்சி முறைமையையும் நிலைநாட்டுவதற்கு ஆர்வம் காட்டப்படுவதில்லை. பாரபட்சமான முறையிலே அரச ஆணையை முன்னெடுக்கும் அரசினைக் கண்டிப்பதும் அதனைச் சீர் செய்யக் கோரி அரசாங்கத்தை வலியுறுத்துவதும் கூட தூய்மையான அரசியலை வலியுறுத்தும் ஏற்பாடுகள்தான் என முன்னாள் நுவரெலிய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்துள்ளார்.

தூய்மையான அரசியலை முன்னெடுப்பதை வலியுறுத்தும் மார்ச் 12 இயக்கத்தின் (M2M) செயலமர்வு தலவத்துகொட மொனாக் இம்பீரியல் மண்டபத்திலே இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே திலகராஜ் மேற்படி கருத்தைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில் ,

மார்ச் 12 இயக்கம் ஆண்டுக்கு ஒரு முறை மார்ச் மாதம் ஒன்றுகூடி தூய்மையான அரசியலை முன்னெடுப்பதைப் பற்றிய உரையாடலைச் செய்யும் அமைப்பாக மாத்திரம் இருந்துவிடக்கூடாது. தூய்மையான அரசியல் என்பதனை உரையாடல்களோடு மட்டுப்படுத்தாமல் செயற்பாடாகவும் முன்னெடுப்பதை உறுதி செய்ய வேண்டும்.

தூய்மையான அரசியலை முன்னெடுப்பதைப் பற்றி பேசும் பலரும் தனிப்பட்ட அரசியல்வாதி ஒருவர் முன்னெடுக்கப்பட வேண்டிய தூய்மையான அரசியலுக்குரிய பிரமாணங்களையே பேசுகின்றனர். அது தேவையானதுதான். அதேநேரம் தனிப்பட்ட அரசியல்வாதிகளை மட்டுமல்லாது தூய்மையான அரசியலை முன்னெடுக்கும் அரசு ஒன்று குறித்த வலியுறுத்தலையும் செய்ய வேண்டியுள்ளது.

பாரபட்சமான முறையிலே அரச ஆணையை முன்னெடுக்கும் அரசினைக் கண்டிப்பதும் அதனைச் சீர் செய்யக் கோரி அரசாங்கத்தை வலியுறுத்துவதும் கூட தூய்மையான அரசியலை வலியுறுத்தும் ஏற்பாடுகள்தான்.

ஒரே வர்த்தமானியில் வெளியான நுவரெலியா, காலி, இரத்தினபுரி மாவட்ட பிரதேச செயலக அதிகரிப்பு பிரகடனத்தை காலி, இரத்தினபுரி மாவட்டத்துக்கு வழங்கி விட்டு நுவரெலியாவுக்கு வழங்காமல் விடுவதும் மாறாக உப செயலகங்களை வழங்குவதும் கூட தூய்மையான அரசியல் இல்லை.

தனிப்பட்ட அரசியல்வாதிகளின் தூய நடத்தை மூலம் தூய அரசியலை கட்டி எழுப்பலாம் என கற்பனை செய்வது போலவே பாரபட்சம் இல்லாத அரசாட்சி முறைமையை வலியுறுத்துவதும் கூட தூய்மையான அரசியலை வலியுறுத்தும் வழிமுறையே என்றும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here