பூண்டுலோயா கீழ்பிரிவு தோட்டத்தில் லயன் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தினால் சேதமடைந்த குடியிருப்புக்களை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ராமேஷ்வரன் இன்று (17.08.2024) காலை நேரில் சென்று பார்வையிட்டார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் ஆலோசனைக்கமைய தீ விபத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து கலந்துரையாடியதுடன். அவர்களுக்கு ஆறுதலும் கூறினார். அத்துடன், அவர்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.
தீ விபத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்டதுடன், சேத விபரங்களையும் கேட்டறிந்தார்.
அதேவேளை, இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுக்குமாறு பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் மற்றும் தோட்ட நிர்வாகத்துக்கும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ராமேஷ்வரன் பணிப்புரை விடுத்தார்.
16.08.2024 (வெள்ளிக்கிழமை) இரவு 8 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாகவும், மூன்று வீடுகள் பகுதியளவிலும் தீக்கிரையாகியுள்ளன.
இந்த தீ விபத்தினால் லயன் தொகுதியில் அமைந்திருந்த 20 வீடுகள் சேதமடைந்ததுடன் இந்த வீடுகளில் குடியிருந்த 20 குடும்பங்களை சேர்ந்த 70 பேர் தற்காலிகமாக தோட்டத்தின் ஆலய மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
(க.கிஷாந்தன்)