அக்ரபத்தனை ஊட்டுவளி பிரதேசத்தில் பாரிய மரமொன்று மின்சாரக்கம்பிகளின் மேல் சரிந்து வீழ்ந்ததில் பல பிரதேசங்களுக்கான மின்சாரம் தடைப்பட்டுள்ளது.
அக்ரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊட்டுவளி பிரதேசத்தில் நேற்று இரவு 8.00 மணியளவில் இப்பிரதேசத்திற்கு வீசிய கடும் காற்றினால் பாரிய மரமொன்று மின்கம்பிகளின் மேல் சரிந்து வீழ்ந்ததால் பல பிரதேசங்களுக்கான மின்சாரத்தடை ஏற்பட்டுள்ளன.
மரம் சரிந்து வீழ்ந்ததன் காரணமாக டயகம அக்கரபத்தனை ஊட்டுவளி என பல பிரதேசங்களுக்கான மின்சாரம் நேற்று ( 09.06.2018) இரவு 8.00 மணிமுதல் தடைப்பட்டுள்ளது. இந்த மின்சாரத்தடை காரணமாக சுமார் ஆயிரங்கணக்கான பொதுமக்களும் வர்த்தகர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
லிந்துலை மின்சார சபையினால் மின்சாரத்தினை வழமைக்கு கொண்டுவரும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.
நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையை தொடர்ந்து நேற்று மாலை முதல் கடும் காற்று வீசி வருகிறது. இந்த காற்று காரணமாக ஊட்டுவளி பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் கூரையும் காற்றினால் அள்ளுண்டு செல்லப்பட்டுள்ளன. இதனால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அந்த வீட்டினை சீர் செய்யும் பணிகளும் இடம்பெற்று வருகின்றது.
கடும் காற்றுடன் மழையும் தொடர்ச்சியாக பெய்து வருவதால் அக்கரபத்தனை பெல்மோரா தோட்டத்தில் பாரிய மண்திட்டு ஒன்று சரிந்து வீழ்ந்துள்ளது. இதனால் 8 குடும்பங்கள் மண்சரிவு அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளனர்.
தொடர்ச்சியாக நுவரெலியா மாவட்டத்திற்கு கடும் காற்று வீசிவருவதுடன் மண்சரிவு அபாயமும் நிலவி வருவதால் மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இதேவேளை இன்று 10 திகதி காலை 08 மணியளவில் லிந்துலை பகுதியில் வீசிய பலத்த காற்றினால் நாகசேனை தோட்டப்பகுதியில் மரமொன்று முறிந்து விழுந்ததில் ஒரு வீடு முற்றாக சேதமடைந்துள்ளமை குறிப்பிடதக்கது.
அக்கரப்பத்தனை நிருபர்
;