விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்கள் தலா 5,000 ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். பொரளை பல்பொருள் அங்காடியில் யுவதி ஒருவரை கொடூரமாக தாக்கிய சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்கள் தலா 5,000 ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு மேலதிக நீதவான் சஜிந்திரா வீரசூரியவினால் நேற்ற(25) பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கமைய இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் நேற்று அடையாள அணிவகுப்பிற்கு ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது, ஏழு பேரில் ஐந்து பேர் முறைப்பாட்டாளரால் அடையாளம் காணப்பட்டதாக எமது நீதிமன்ற செய்தியாளர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், முறைப்பாட்டாளர் மீது முன்னைய குற்றங்கள் இருப்பதாக பொலிஸார் தெரிவித்திருந்த போதிலும், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் அது குறிப்பிடப்படவில்லை.
தாக்குதலுக்கு உள்ளான யுவதி, கடந்த வெள்ளிக்கிழமை 22 ஆம் திகதி காலை 9.30 மணியளவில் பல்பொருள் அங்காடிக்கு சென்றுள்ளார்.
இதன்போது, பால் பொதியை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர். அவர் குழந்தை பால் பாக்கெட் வாங்க சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்றுள்ளார் எனவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதன் விலை 1080 ரூபாய் என்றும், அப்படி பணம் இல்லாததால் 60 ரூபாய்க்கு சாக்லேட் ஒன்றை வாங்கியதாகவும் கூறப்படுகிறது. குறித்த பெண்ணை ஊழியர்கள் கண்காணித்து வருவதாகவும், அவர் வெளியே வர முற்பட்ட போது, முகாமையாளரால் தாக்கப்பட்டதாகவும் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.
இது தொடர்பான வழக்கு நவம்பர் 8ஆம் திகதிக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதவான் உத்ததவிட்டார்.