பிணை முறிகளில் ‘இழந்ததை அறவிட நடவடிக்கை எடுக்கவும்’ : அநுர

0
127

மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனின் சேவைக்காலத்தை நீடிக்காமல், மத்திய வங்கியின் பிணை முறிகளினால் இழக்கப்பட்ட மக்களின் பணத்தை மீண்டும் கைப்பற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வலியுறுத்தியுள்ளார்.

மத்திய வங்கியின் ஆளுநர், பிழை செய்திருந்தால் சட்டத்தின் பிரகாரம் அவருக்குத் தண்டனை வழங்கவேண்டும். அவ்வாறு செய்யாமல், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகிய இருவரும் இணைந்து பிணைமுறிகள் பிரச்சினையை அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்), மேல் திணித்துத் தப்பித்துக கொள்வதற்கு முயல்கின்றனர் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

பத்தரமுல்லையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதேவேளை, ஜே.வி.பி எம்.பியான சுனில் ஹந்துநெத்தி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இரகசியமாக கலந்துரையாடியுள்ளார் என்ற குற்றச்சாட்டை தான் கண்டிப்பதாகவும் அவர், மேலும் கூறினார்.

‘மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், நாணயமானவர் என்றால், அவரது பதவி தொடர்பில், ஜனாதிபதி விமர்சித்த போதே அவர், பதவியிலிருந்து விலகியிருக்க வேண்டும். அப்பதவியிலிருந்து அவர் விலகாமல் இருக்கின்றார் என்றால் அவர் ஒரு பெரிய கள்ளன் என்பது புலப்படுகின்றது என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தனக்கு துணையாக இருக்கின்ற தைரியத்தில்தான் அர்ஜுன மகேந்திரன் இன்னும் பதவியில் இருந்து விலகாமல் உள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

‘தற்போதைய அரசாங்கம் ஆட்சியமைப்பதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலின் ஊழல் மோசடிக் குற்றச்சாட்டு அமைந்திருந்தது.

‘அரசியலில் இருந்து பொருளாதாரத்தைக் கணக்கிடாது. பொருளாதாரத்தில் இருந்து அரசியலை வலுப்படுத்தி, பொருளாதாரம் தொடர்பிலான நிபுணத்துவம் வாய்ந்த ஒருவர் இருந்த காலம் 2005ஆம் ஆண்டுக்குப்பின்னர் மலையேறிவிட்டது’ என்றும் அவர் கூறினார்.

பாநூ கார்த்திகேசு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here