நல்லாட்சி அரசாங்கம் பல்வேறு ஜனநாயகப் பண்புகளை நாட்டிற்குள் கொண்டு வந்தது என்பதை மறுப்பதற்கில்லை. எனினும் கடந்தகால ஆட்சியாளர்களின் மோசடிகாரர்களை அம்பலப்படுத்துவதற்கு முன்பதாக தேசிய அரசாங்கத்தின் உள்ளார்ந்த முரண்பாடுகளும் ஒரு சிலரின் ஊழல் மோசடிகளும் நாடளாவிய ரீதியாக மக்கள் மனதில் அதிருப்தியைக் காட்டியுள்ளன. குறிப்பாக பிணை முறி விவகாரம் நாடு தழுவிய ரீதியாக ஐக்கிய தேசியக் கட்சியின் பின்னடைவுக்கு காரணமாகியுள்ளமை புலனாகிறது. மலைநாட்டிலும் இதுவே நிலைமை. தொழிலாளர்கள் தமது ஊழியர் சேமலாப நிதி சூறையாடப்பட்டுவிட்டதான பிரச்சாரத்திற்கு அஞ்சிவிட்டனர் என மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் விடுத்திருக்கும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தேர்தல் முடிவுகள் தொடர்பாக அவர் விடுத்திருக்கும் அறிக்கையிலேயே மேற்படி கருத்தினை தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கடந்த மூன்றாண்டு காலமாக நல்லாட்சி அரசாங்கம் பல்வேறு ஜனநாயகப் பண்புகளை நாட்டுக்குள் கொண்டு வந்திருக்கின்றது என்பதை மறுப்பதற்கில்லை. இந்த தேர்தல் அமைதியான முறையில் இடம்பெற்றமையே அதற்கு பெரும் சான்றாகும். அதேபோல தேசிய அரசாங்கத்திற்குள் இருந்த பனிப்போர் தேர்தல் காலத்தில் வெளிப்பட்டது. அரசாங்கத்துக்குள்ளேயே பல்வேறு விமர்சனங்கள் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அதற்கு ஜனாதிபதியே முன்னிலை வகித்தார் என்று சொல்லலாம். தன்னை தவறற்றவர் எனக் காட்டிக்கொள்வதற்காக அவர் மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளும் ஆளுகின்ற அரசாங்கத்தின் மீது அதிருப்தியை ஏற்படுத்திவிட்டிருக்கின்றது.
கடந்த ஆட்சியில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றதற்கான ஆதாரங்கள் பல இருந்தபோதும் அவை குறித்த விசாரணைகள் துரிதப்படுத்தப்படவில்லை. பாரிய ஊழல் மோசடிகளுக்கு மாறாக சிறு, சிறு குற்றங்களைக் காரணம் காட்டியே கைதுகளும் விசாரணைகளும் இடம்பெற்றன. அதே நேரம் தேசிய அரசாங்கத்தில் இடம்பெற்றதாகக் கருதப்படும் பிணை முறிவிவகாரம் தொடர்பில் துரிதமாக விசாரணைகள் நடைபெற்றதுடன் தேர்தல் காலத்தில் அந்த அறிக்கைகள் வெளியிடப்பட்டமை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக பெரும்தோட்டப் பகுதிகளில் பிணை முறி மோசடியின் காரணமாக தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதி சூறையாடப்பட்டுள்ளதாக அரசுக்கு எதிராகக் கொண்டு செல்லப்பட்ட பிரச்சாரம் மக்களை அச்சத்துக்கு உள்ளாக்கியது. தோட்டத் தொழிலாளர்களின் ஒரே சேமிப்பாகவும் சொத்தாகவும் இருப்பது ஊழியர் சேலாபநிதிதான். அதனை இழக்கப்போகிறோம் என்ற பய உணர்வு அவர்களிடத்தில் அழுத்தமாக முன்வைக்கப்பட்டதை இறுதிநேர தேர்தல் பரப்புரைகளின்போது எம்மால் உணரக்ககூடியதாக இருந்தது.
நகரை அண்டிய தோட்டப்பகுதிகளின் தேர்தல் முடிவுகளை பார்க்கும்போது அது நன்றாகவே புலப்படுகின்றது. நாம், ஹட்டன் நகர சபையையும் நுவரெலியா மாநாகர சபையையும் வெற்றிகொண்ட அளவுக்கு தோட்டப்பகுதிகள் அதிகமாகவுள்ள பிரதேச சபைகளில் ஆசனங்களை பெற முடியாமல் போனமைக்கு இதுவே காரணமாகும். எனினும் புதிதாக உருவாக்கப்பட்ட மஸ்கெலியா பிரதேச சபையை கைப்பற்றியுள்ளோம். ஹட்டன் நகர சபையை வெற்றிகொண்டது எனக்கு எதிரான விஷம பிரசாரத்துக்கு எதிராக கிடைத்த வெற்றியாகவே பார்க்கிறேன்.
தேசிய அரசாங்கத்தின் உள்ளார்ந்த முரண்பாடுகளும் ஒரு சிலரின் ஊழல் மோசடிகளும் நாடளாவிய ரீதியாக மக்கள் மனதில் அதிருப்தியைக் காட்டியுள்ளன. குறிப்பாக பிணை முறி விவகாரம் நாடு தழுவிய ரீதியாக ஐக்கிய தேசிய கட்சியின் பின்னடைவுக்கு காரணமாகியுள்ளமை புலனாகிறது. மலைநாட்டிலும் இதுவே நிலைமை. எது எவ்வாறாயினும் எமக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதோடு மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளிக்கின்றோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.