பிரச்சினைகள் இல்லாத அழகான நாட்டை தான் தற்போதைய ஆட்சியாளர்களிடம் ஒப்படைத்ததாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலன்நறுவை மாவட்ட மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நாடு தற்போது விழுந்துள்ள நிலைமை தொடர்பாக அரசாங்கத்தை குறை கூறுவதால் தீர்வு கிடைக்காது. நாட்டை ஆட்சி செய்பவர்கள், ஆட்சி செய்யாதவர்கள் என அனைவரும் தற்போது ஒரு மேடைக்கு வர வேண்டும். பிரச்சினைகள் இல்லாத அழகான நாட்டை நான் கையளித்தேன்.
மக்கள் உண்டு, குடித்து மகிழ்ச்சியாக இருந்தனர். கமத்தொழிலாளர்கள் சிறப்பான பயிர் செய்தனர். எனது ஆட்சிக்காலத்தில் பிரச்சினைகள் இல்லாமல் இல்லை.
எனினும் நாட்டு குடி மக்களின் நாளாந்த வாழ்க்கை இன்றைய நிலைமை போல் இருக்கவில்லை. அரசாங்கத்தை குற்றம் சுமத்துவதால், பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது.
இது நாட்டை ஆட்சி செய்வோர் மற்றும் ஆட்சி செய்யாதோர் ஒன்றாக இணைய வேண்டிய சந்தர்ப்பம். நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் ஒரு மேடைக்குள், ஒரு மேசைக்கு வந்து நாட்டை காப்பாற்ற வேண்டும்.
கண்ணுக்கு தெரிந்தே வீழ்ந்து வரும் நாட்டை தூக்கி நிறுத்த வேண்டிய நேரம். எம்மீது கல்லெறிந்தாலும் எமக்கு கெட்டப் பெயரை ஏற்படுத்தி முயற்சித்தாலும் திருடன் எனக் கூறி அவமானம் செய்தாலும் வீழ்ந்து விடப் போவதில்லை.
சுமார் 54 ஆண்டுகளாக கட்சியிலும் அரசியல் வாழ்க்கையிலும் ஈடுபட்டு வருவதால், இந்த அவமானங்கள், அவதூறுகள் பழகி போய்விட்டது. எமது நாட்டில் தற்போது பிரச்சினைகள் அதிகம். கமத்தொழிலாளர்கள் கண்ணீரில் வாழ்க்கையை நடத்துகின்றனர்.