பிரதேச சபைகளின் ஊடாக முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களில் பெருந்தோட்ட பகுதிகளும் உள்வாங்கப்பட வேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணி முன்வைத்த கோரிக்கை நல்லாட்சி அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அதற்கு வெற்றிகரமான தீர்வு கிடைத்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும் தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவருமாகிய அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர், அமைச்சர் மனோ கணேசன் மற்றும் பிரதித் தலைவர், இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஸ்ணன் உள்ளிட்ட கூட்டணியின் அனைத்து முக்கிய பிரமுகர்களின் பூரண ஒத்துழைப்பில் பிரதேச சபை சட்டமூலத்தில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என கோரிக்கை இந்த நல்லாட்சி அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
கடந்த பொதுத் தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி மக்களின் முன்வைத்த வாக்குறுதிகளின் முக்கியமான ஒரு அங்கமாக பிரதேச சபை சட்டத்தில் திருத்தம் என்ற கோரிக்கை அமைந்திருந்தது.
அதற்படி, உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா அவர்களினால் பிரதேச சபை திருத்தச் சட்டமூலம் தொடர்பான அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்பட்டு அதற்கு சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதியும் பெற்று அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.
அதன்படி, 1987ஆம் ஆண்டின் 15ம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர இன்று (12-09-2017) அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. அதன்படி 1987ஆம் ஆண்டின் 15ம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் 19ஆம் பிரிவின் (1)ஆம் உட்பிரிவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அவ்உட்பிரிவின் (ஓஐஏ) என்னும் பந்தியில், ‘கிராம வேலைகளை நிருமாணிப்பதிலும் மாற்றுவதிலும்’ என்னும் சொற்களுக்குப் பதிலாக, ‘கிராம வேலைகளை அல்லது தோட்டக் குடியிருப்புக்களை நிருமாணிப்பதிலும் மாற்றுவதிலும்” என்னும் சொற்களை இடுவதன் மூலம் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அவ்வுட்பிரிவின் (ஓஓஐஐ) என்னும் பந்தியில் ‘தேர்ந்தெடுத்த கிராமங்களின் ஒருங்கிணைந்த அபிவிருத்தியிலும்” என்னும் சொற்களுக்குப் பதிலாக, ‘தேர்ந்தெடுத்த கிராமங்கள், தோட்டக் குடியிருப்புக்கள் என்பவற்றின் ஒருங்கிணைந்த அபிவிருத்தியிலும்” என்னும் சொற்களை இடுவதன் மூலம் சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் முதன்மை சட்டவாக்கத்தின் 33ஆம் பிரிவு பின்வருமாறு திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
‘பெருந்தோட்ட பிராந்தியங்களின் விடயத்தில் பிரதேச சபைகள் விசேட தீர்மானமொன்றை சேர்த்துக் கொண்டதன் மேல் அத்துடன் இயைபான தோட்டத்தின் நிருவாக அதிகாரிகளுடனான ஒருப்பாட்டுடனும்” அந்தந்த பெருந்தோட்ட பிராந்தியங்களில் வதிவோரின் சேமநலனுக்கென அவசியமான வீதிகள்” கிணறுகள் மற்றும் வேறு பொது வாழ்வசதிகளை மேம்படுத்துவதற்கு பிரதேச சபை நிதியத்தை பயன்படுத்தலாம்.
இப்பிரிவின் நோக்கத்திற்காக ‘பெருந்தோட்டப் பிராந்தியங்கள்” என்பது தேயிலை, இறப்பர், தென்னை மற்றும் எண்ணெய்கொள் மரம் ஆகியன பயிர்ச்செய்யப்படும் தோட்டங்களில் வதிவுள்ள தொழிலாளர்கள் வாழும் மத்திய, ஊவா, சப்பிரகமுவ, தெற்கு, மேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் மாவட்டங்களிலுள்ள பிரதேச செயலாளர் பிரிவுகளின் கீழ்வரும் இடப்பரப்புக்கள் எனப் பொருள்படும்’.
இதுவரை காலமும் பிரதேச சபைகள் ஊடாக பெருந்தோட்ட மக்களுக்கு சேவையாற்ற முடியாது என்றிருந்த மலையக கறுப்பு வரலாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமையில் பிரதேச சபைகள் நிதியை கொண்டு தோட்ட மக்களுக்கும் சேவையாற்ற முடியும் என்ற மலையக சரித்திர வரலாறு மாற்றி எழுதப்பட்டுள்ளது.
கடந்த பொதுத் தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி மீது நம்பிக்கை வைத்து வாக்களின் அனைத்து மலையக பெருந்தோட்ட மக்களுக்கும் இது ஒரு மகத்தான வரலாற்று வெற்றியாகும். இதன்மூலம் பெருந்தோட்ட பகுதிகளில் மென்மேலும் அபிவிருத்தி பணிகளை துரிதப்படுத்த முடியும் எனவும், இதற்கு குரல் கொடுத்த சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் இயக்குனர் பெ. முத்துலிங்கம் அவர்களுக்கு எமது கூட்டணி சார்பாக மனமார்ந்த நன்றிகளையும் அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.