புதிய அரசியலமைப்பு விடயத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை மீறப்போவதில்லை என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
புதிய அரசியலமைப்பு தொடர்பில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சபைஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் பதிலளித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
உரிய ஆய்வுகளுக்கு பிறகே வளமான நாடு, அழகான வாழ்க்கை எனும் தேர்தல் விஞ்ஞாபனத்தை நாம் முன்வைத்தோம். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கம் உட்பட புதிய அரசியலமைப்பு தொடர்பில் அதில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு நாம் வழங்கிய வாக்குறுதியை மீறப்போவதில்லை. அது நிச்சயம் நிறைவேற்றப்படும். எனினும், எதிரணிகளின் நிகழ்ச்சி நிரலுக்கமைய எம்மால் செயல்பட முடியாது.” எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஐந்து வருடங்களுக்குரிய திட்டங்களே தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. எல்லா விடயங்களும் முதல் ஐந்து மாதங்களுக்குள் நிறைவேற்றப்படும் என நாம் கூறவில்லை.
உரிய நேர எல்லையின் பிரகாரம்தான் அரசாங்கம் செயல்படுகின்றது. உள்ளாட்சிசபைத் தேர்தலின் பிறகு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும். அரசாங்கத்தால் வகுக்கப்பட்ட வேலைத்திட்டம் உள்ளது. அதற்கமைய புதிய அரசியலமைப்பு தொடர்பான பணியும் இடம்பெறும்.
அரசாங்கத்துக்குரிய செல்வாக்கு சரியாது, அது காலம் செல்ல செல்ல அதிகரிக்கும்.
புதிய அரசியலமைப்பை ஆரம்பத்தில் இருந்து தொடங்க வேண்டியதில்லை. நிறுத்திய இடத்தில் இருந்து ஆரம்பிக்கலாம். இது விடயத்தில் ஒருபோதும் காலத்தை இழுத்தடிக்கப்போவதில்லை எனவும் நீதி அமைச்சர் உறுதியளித்தார்.