புத்தல – கதிர்காமம் வீதியில் காட்டு யானைகளின் வாகனங்கள் மீதான தாக்குதல்களை தடுக்கவும் காட்டு யானைகளை விரட்டவும் வனஜீவராசிகள் திணைக்களம் நடமாடும் வாகனங்களை ஈடுபடுத்தியுள்ளது.
குறித்த வீதியில் காட்டு யானைகளின் தாக்குதலினால் வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன என ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வெளியாகும் செய்திகள் தொடர்பில் அவதானம் செலுத்தி இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, இந்த நிலைமையை தடுப்பதற்கு குறுகிய கால வேலைத்திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீரவும் வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அதன்படி கடந்த 4ம் திகதி அதிகாலை 5.00 மணி முதல் நள்ளிரவு வரை புத்தல – கதிர்காமம் வீதியில் தங்கியுள்ள காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டவும், வாகன விபத்துக்களை தடுக்கவும் யால கல்கே வனச்சரக அலுவலக அதிகாரிகளும் வாகனங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
வனஜீவராசிகள் திணைக்களம் இந்த வேலைத்திட்டத்தை இனிமேல் தொடர்ந்து நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரியபண்டார தெரிவித்தார்.
இவ்வீதியில் வாகனங்களில் பயணிக்கும் சிலர் காட்டுயானைகளுக்கு உணவளிப்பதாலும், விலங்குகள் வீதியில் காத்திருந்து வாகனங்களில் இருந்து உணவுகளை பெற்றுக்கொள்வதாலும், காட்டு யானைகளினால் ஏற்படும் சேதங்கள் அதிகரித்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவிக்கின்றது. பயணிகளும் வாகன ஓட்டிகளும் காட்டு யானைகளை கேலி செய்வதன் மூலம் அற்ப இன்பத்தை பெற முயற்சிக்கின்றனர்.
எனவே புத்தல – கதிர்காமம் வீதியில் மட்டுமன்றி உடவலவ, ஹபரணை போன்ற இடங்களிலும் காட்டு யானைகளுக்கு உணவளிக்கும் நபர்களையும், தீங்கு விளைவிக்கும் வகையில் நடந்துகொள்ளும் நபர்களையும் கைது செய்யுமாறு வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் வனவிலங்கு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
கடந்த 04 நாட்களாக புத்தல – கதிர்காமம் வீதியில் நடமாடும் வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டமையினால் காட்டு யானைகள் வீதிக்கு வருவதை நிறுத்தியுள்ளதாகவும், அக்காலப்பகுதியில் வாகனங்களுக்கு சேதம் ஏற்படுத்திய சம்பவங்கள் பதிவாகவில்லை எனவும் வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.