இலங்கையில் பொருளாதார அபிவிருத்தி ஏற்பட்டு இந்நாட்டு இளைய தலைமுறையினருக்கு சிறந்த எதிர்காலம் அமையவேண்டுமெனில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தேர்தலில் மக்கள் அமோக ஆதரவு வழங்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் கொத்மலை பிரதேச அமைப்பாளர் சண்முகம் திருச்செல்வம் தெரிவித்தார்.
கொத்மலை பகுதிக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டு அலுவலகம் தவலந்தென்ன நகரில் நேற்று (14.07.2024) திறந்துவைக்கப்பட்டது.இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய சண்முகம் திருச்செல்வம் மேலும் கூறியவை வருமாறு,
“ ஐக்கிய தேசியக் கட்சிக்கு மக்கள் வாக்களிக்கவில்லை எனவும், தேசிய பட்டியல் ஊடாக கிடைக்கப்பெற்ற ஆசனம் மூலம் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றம் சென்றார் எனவும் சிலர் விமர்சனங்களை முன்வைத்தனர். ஆனால் தனி ஒருவராக நாடாளுமன்றம் சென்று, ஜனாதிபதியாகி 2 கோடியே 20 லட்சம் மக்களை அவர் காப்பாற்றியுள்ளார். அதுதான் ரணில் விக்கிரமசிங்கவின் ஆளுமை, தலைமைத்துவம். இன்று நாட்டு மக்களின் பொதுத்தலைவராக அவர் மாறியுள்ளார். அன்று ஜனாதிபதி ரணிலை விமர்சித்தவர்கள்கூட இலங்கைக்கு ரணில்தான் வேண்டும் என கூறத்தொடங்கியுள்ளனர்.
வங்குரோத்து நிலையிலிருந்த நாட்டை அவர் மீட்டுள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களில் சில வன்முறையாளர்களால் சட்டம், ஒழுங்கு கையில் எடுக்கப்பட்டது. இதனால் நாட்டில் அராஜக நிலை ஏற்பட்டது. சட்டம், ஒழுங்கையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிலைநாட்டினார். இன்று அமைதியான சூழ்நிலை நிலவுகின்றது.
நாட்டில் ஆட்சி அதிகாரத்தை பொறுப்பேற்காது எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்டவர்கள் புறமுதுகு காட்டி ஓடினர். ஆனால் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் சவாலை ஏற்று, இன்று ஜனாதிபதி ரணில் சாதித்து காட்டியுள்ளார்.
எனவே, நாடு சிறந்த பொருளாதார அபிவிருத்தியை நோக்கி பயணித்து இளைஞர்களின் எதிர்காலம் சிறக்க வேண்டுமெனில் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க நிச்சயம் வெற்றிபெறவேண்டும். மக்களும் அதற்குரிய வாய்ப்பை வழங்க வேண்டும்.” – என்றார்.
க.கிஷாந்தன்