புலிகளை தோற்கடித்ததாக பெருமைபட்ட அதிசிறந்த புலனாய்வுப் பிரிவுக்கு அந்த தேரர் எங்கிருக்கிறார் என கண்டுபிடிக்க முடியவில்லை என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சற்றுமுன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் சற்றுமுன் உரை நிகழ்த்திய அவர் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை பட்டியலிட்டதுடன் காரசாரமாக தனது கருத்துக்களை முன்வைத்தார்.
அவரது உரையின் சுருக்கம் வருமாறு,
அந்த தேரரால் சுதந்திரமாக வீடியோவை வெளியிட முடியுமென்றால் அவரை கைது செய்ய பொலிஸார் தயங்குவது ஏன்? நான் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் அவருக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்திருக்கிறோம்.
அவரை கைது செய்வதற்காக நான்கு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிகிறோம். ஆனால் இதுவரை கைது செய்யப்படவில்லை.
உலகத்திலே பல பில்லியன் மக்கள் ஏற்றுக்கொண்ட இஸ்லாமிய மார்க்கத்தின் தூதர் நபிகள் நாயகத்தை மிக மோசமான வார்த்தைகளால் திட்டுகிறார். ஓர் இஸ்லாமியனாக நான் அதனை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். உரிமை மறுக்கப்பட்ட போது தமிழர்கள் ஆயுதம் ஏந்தியது போல, முஸ்லிம் இளைஞர்களையும இவர் தூண்டுகிறார்.
முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் தொடர்ச்சியாக தாக்கப்படுகின்றன. இன்று அதிகாலை நுகேகொடையில் முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான வர்த்தக நிலையம் தீ வைக்கப்பட்டுள்ளது. அதிகாலை 5 மணிக்கு நான் அந்த இடத்தில் இருந்தேன்.
இனவாதம் பேசும் தேரர் எதனைச் சொல்ல முற்படுகிறார்? அவருடைய நோக்கம் தான் என்ன? அனைத்து இன மக்களும் வாழும் இந்நாட்டில் ஒரு தனி இனம் தாக்கப்படுவது குறித்து யாருக்கும் அக்கறை இல்லைய? இதனை எண்ணி நான் வெட்கப்படுகிறேன்.
பொலிஸ் திணைக்களத்துக்கு பொறுப்பான அமைச்சரிடமும் நான் முறைப்பாடு செய்திருக்கிறேன். இது தொடர்பில் பொறுப்புள்ளவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன்.