பெண் குழந்தைகளுக்கு 9 வயதில் திருமணம்.. ஈராக் சட்டத்தினால் சர்ச்சை

0
40

ஈராக்கில் பெண்களின் சட்டப்பூர்வ திருமண வயதை 9ஆகக் குறைக்கும் வகையில் புதிய சட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.

பெண்கள் இளம் வயதில் முறையற்ற உறவுகளில் செல்வதைத் தடுக்கவே இந்தச் சட்டத்தை முன்மொழிந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இது அங்கே மிகப் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈராக் ஒரு இஸ்லாமிய நாடாகும். அங்குக் கடுமையான இஸ்லாமியச் சட்டங்கள் பின்பற்றப்பட்டு வருகிறது.
இதற்கிடையே அங்கே முன்மொழியப்பட்டுள்ள ஒரு சட்டத் திருத்தம் பெரும் எதிர்ப்புகளைக் கிளப்பியுள்ளது. அதாவது ஈராக்கில் பெண்களின் சட்டப்பூர்வ திருமண வயதை 9ஆகக் குறைக்கும் வகையில் புதிய சட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. இப்போது அங்கே பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது 18ஆக இருக்கும் நிலையில், அதை 9ஆகக் குறைக்க ஈராக் சட்டத்துறை அமைச்சகம் இந்த சட்டமூலத்தினை முன்மொழிந்துள்ளது.

மேலும், குடும்ப விவகாரங்களில் மத போதகர்கள் அல்லது நீதித்துறையை என இரு தரப்பில் யார் முடிவெடுக்கலாம் என்பது குறித்து குடிமக்களே தேர்வு செய்யவும் இந்த சட்டம் அனுமதிக்கும். அதேநேரம் மத போதகர்களுக்கு இதுபோல அதிகாரத்தைக் கொடுப்பது வாரிசு உரிமை, விவாகரத்து மற்றும் குழந்தைப் பாதுகாப்பு விஷயங்களில் பெண்களின் உரிமைகளை மேலும் பறிக்கும் என்று விமர்சனங்களும் எழுந்துள்ளன.

இந்த சர்ச்சைக்குரிய சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் பெண்களின் திருமண வயது 9ஆகவும் ஆண்களின் திருமண வயது 15 ஆகவும் குறையும். இது குழந்தைத் திருமணம் மற்றும் பெண்கள் மீதான சுரண்டலை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. பெண்களின் உரிமைகள் மற்றும் பாலின சமத்துவத்திற்காக நடந்த பல தலைமுறை போராட்டத்தை இந்த சட்டம் சீர்குலைக்கும் என்ற எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

மனித உரிமை அமைப்புகள், பெண்கள் உரிமைக் குழுக்கள் இந்த சட்டமூலத்தினை கடுமையாக எதிர்த்துள்ளனர். இது இளம் பெண்களின் கல்வி, உடல்நிலை மற்றும் நல்வாழ்வைக் கடுமையாகப் பாதிக்கும் என்று எச்சரித்துள்ளனர். மேலும், குழந்தைத் திருமணங்களால் பருவகால கர்ப்பம், குடும்ப வன்முறை மற்றும் இடைநிற்றல் அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது. ஏற்கனவே ஈராக்கில் 28 சதவீத பெண்களுக்கு 18 வயதுக்கு முன்பே திருமணம் நடப்பதாக யுனிசெப் அமைப்பு கூறுகிறது.

இந்த நேரத்தில் இப்படி ஒரு சட்டம் இயற்றப்பட்டால் அது ஈராக்கை மேலும் பின்னோக்கியே நகர்த்தும் என்று சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் இந்த சட்டமூலம் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் இந்த சட்ட மூலம் திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டது. இந்தச் சூழலில் இப்போது மீண்டும் அந்த சட்டமூலத்தினை முன்மொழிந்துள்ளனர். இந்த முறை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு உள்ள ஷியாக்களின் ஆதரவு இருப்பதால் இது சட்டமாக நிறைவேறும் ஆபத்தும் நிலவுகிறது.

திருமணத்திற்கான வயதைக் குறைப்பதுடன் குடும்ப விவகாரங்களில் சிக்கல் ஏற்படும் போது அதைத் தீர்க்கும் அதிகாரம் மத போதகர்களுக்கு வழங்கப்படுகிறது. இதுவும் மிக முக்கிய சட்டமாகப் பார்க்கப்படுகிறது. ஈராக்கில் அனைத்து குடும்ப விவகாரங்களையும் சட்டத்துறையே விசாரிக்கும் என 1959ல் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், அதை மாற்றி மத போதகர்களுக்கு அதிகாரத்தைக் கொடுப்பது பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளது.

இஸ்லாமிய சட்டத்தை அமுல்படுத்தவும் இளம் பெண்கள் ஒழுக்கமற்ற உறவுகளில் செல்வதைத் தடுக்கவே இந்தச் சட்டம் முன்மொழியப்பட்டுள்ளதாக ஈராக் அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும், குழந்தை திருமணங்கள் இந்த பிரச்சினைகளைச் சரி செய்யாது என்றும் புதிய பிரச்சினைகளையே ஏற்படுத்தும் என்ற எதிர்ப்பும் ஒரு பக்கம் அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here