மின்கட்டணத்தை எதிர்வரும் பெப்ரவரி மாதம் குறைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் மஞ்சுள பிரனாந்து தெரிவித்துள்ளார். மின்கட்டண திருத்தம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியதாவது,
மின்கட்டண திருத்தம் தொடர்பில் கடந்த 20 ஆம் திகதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். எதிர்வரும் ஜனவரி மாதம் 15 ஆம் திகதி சகல தரவுகளையும் வழங்குவதாக மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.
நீர் மின்னுற்பத்தி, நிலக்கரி மற்றும் எரிவாயுடனான மின்னுற்பத்தி மற்றும் அதற்கான செலவு தொடர்பான தரவுகளை மின்சார சபையிடம் கோரியுள்ளோம்.
மின்கட்டண திருத்தம் தொடர்பில் மின்சார சபை முன்வைக்கும் யோசனைகளை முன்னிலைப்படுத்தி, ஜனவரி மாதம் இறுதி வாரத்தில் மின் கட்டணம் தொடர்பில் பொதுமக்களிடம் கருத்து கணிப்பு கோர தீர்மானித்துள்ளோம்.
மின்சார சட்டத்துக்கமைய மின்கட்டண திருத்தம் தொடர்பான சகல நடவடிக்கைகளும் வெளிப்படையான முறையில் முன்னெடுக்கப்படும்.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் மின்கட்டணத்தை குறைக்க உத்தேசித்துள்ளோம். வற் வரி அதிகரிப்பு மின்கட்டண திருத்தத்தில் தாக்கம் செலுத்தாது என்றார்.